பணத்திற்காக அல்ல, என்னுடைய ஆர்வத்தினால், நான் ஒரு போட்டோகிராபர் ஆனேன். நான் தேவனுடைய படைப்பின் காட்சிகளை என்னுடைய கேமராவில் படம் எடுத்து மகிழ்பவன். நான் தேவனுடைய விரல் பதிவுகளை ஒவ்வொரு மென்மையான பூவிதழிலும், வண்ணமயமான சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவிலும், கலர் பூசப்பட்ட மேகங்களிலும், வானமென்ற விரிப்பில் புள்ளியிட்டுள்ள நட்சத்திரங்களிலும் காண்கின்றேன்.
என்னுடைய கேமராவிலுள்ள வலிமையான ஜூம் பண்பினால், தேவனுடைய படைப்பாகிய அனைத்து உயிரினங்களையும் படமெடுக்க முடிகிறது. மலர்கள் நிறைந்த செரி மரங்களில் அணில்களின் தாவலையும், வண்ணத்துப் பூச்சிகள் மலர் விட்டு மலர் நகர்வதையும், பாறைகள் நிறைந்த கரும் கடற்கரையில் ஆமைகளின் சூரிய குளியலையும் நான் படமாக்கினேன். ஓவ்வொரு படமும், அதனைப் படைத்த அற்புதரைப் போற்றத் தூண்டியது.
அவருடைய படைப்பின் தனிச்சிறப்பினை வியந்து, அவரைத் துதிக்கும் மக்களில் நான் முதலானவனல்ல. 104 ஆம் சங்கீதத்தில், தாவீது தேவனுடைய கலைத்திறனை வியந்து பாடியுள்ளார் (வச. 24). “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது. அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அவருடைய மிகச்சிறந்த படைப்புகளுக்கு ஏற்ற வேளையில் உணவளித்து, அவற்றை முழுமையாக பராமரிக்கின்றார் (வச. 27-31). தேவன் படைத்த அத்தனை ஜீவன்களையும் தன்னைச் சுற்றியிருக்கக் காணும்போது, சங்கீதக்காரனின் உள்ளம் நன்றியால் நிரம்பி வழிந்து அவரைப் போற்றுகின்றது. “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன். நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (வச. 32) என்கின்றார்.
தேவனுடைய மிகப்பெரிய, எண்ணிலடங்காத படைப்புகளை நாம் காணும் போது, அவருடைய படைப்பின் நோக்கத்தையும், அவர் அவற்றை பராமரிக்கும் விதத்தையும் தெரிந்துகொள்ளலாம். சங்கீதக்காரனைப் போன்று நாமும் நம்மை உருவாக்கியவரைப் பாடுவோம். அவருடைய வல்லமை, மாட்சிமை, அன்பினை நினைத்து நன்றியோடு பாடி, அவர் இன்றும் போற்றப்படுபவர், இனிமேலும் போற்றப்படுபவர் எனப்பாடுவோம். அல்லேலூயா.
தேவன் அற்புதமானவர், அவருடைய கிரியைகள் மகத்துவமானவை.