நாங்கள் லண்டனிலிருந்த போது, நானும் என் மனைவி மார்லென்னும் ஆகாயத் தோட்டத்தைப் பார்க்க ஒரு நண்பன் ஏற்பாடு செய்திருந்தார். லண்டனின் வர்த்தக மாவட்டத்தில் முப்பத்தைந்து அடுக்கு கட்டிடத்தின் மேல் தளத்தில் கண்ணாடியால் சூழப்பட்ட ஒரு தளம் முழுவதும் மரங்கள், செடிகள் மற்றும் பூக்களால் நிறைந்துள்ளது. ஆனால், அந்த உயர்ந்த இடம் எங்கள் கவனத்தை ஈர்த்தது. நாங்கள் அந்த உயரத்திலிருந்து 500 அடி கீழே பார்க்கும் போது பரிசுத்த பவுலின் கதீட்ரல், லண்டன் கோபுரம், மற்றும் அநேகக் காட்சிகளைப் பார்த்து வியந்தோம். அந்த தலைநகரின் முழு அழகும் எங்களை பிரமிக்கச் செய்து, சரியான கண்ணோட்டத்தைக் குறித்து கற்றுக்கொள்ள எங்களுக்குதவியது.
நாம் அநுபவிக்கும் யாவற்றையும் தேவன் சரியான கோணத்தில் காண்கின்றார். சங்கீதக்காரன், “கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்கைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின் மேல் கண்ணோக்கமானார்” (சங். 102:19-20) எனக் கூறுகின்றார்.
சங்கீதம் 102ல் குறிப்பிட்டுள்ள வருத்தப்பட்ட ஜனங்களைப் போன்று, நாமும் தற்பொழுதுள்ள போராட்டங்களில் இழுத்து அடைக்கப்பட்டு, உதவியற்ற நிலையில் முனகிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், தேவன் நம் வாழ்வை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை காண்கின்றார். நம்முடைய கண்களை மறைக்கின்ற காரியங்களால் தேவன் ஒருபோதும் மறைக்கப்படுவதில்லை. சங்கீதக்காரன் எதிர்பார்ப்பது போல அவருடைய நேர்த்தியான கண்ணோட்டம் விடுதலைக்கு நேராக சென்று, கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களையும் விடுதலையாக்குகின்றது (வச. 19, 27-28).
கடினமான நேரங்களில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அடுத்துவருவது என்னவென்று நமக்குத் தெரியாது, ஆனால், தேவன் அறிவார். நமக்கு முன்பாகவுள்ள ஒவ்வொரு மணித்துளியிலும் நாம் தேவனை நம்பி வாழ்வோம்.
நம்முடைய பார்வை கிறிஸ்துவையே நோக்கியிருக்கும் போது, மற்ற யாவும் சரியான கோணத்தில் வந்துவிடும்.