1997ம் ஆண்டில் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, சொற்ப வேலைகளே இருந்த நிலையில் அநேகர் வேலை தேடிக் கொண்டிருந்தனர். அப்படி வேலை தேடியவாகளில் நானும் ஒருவன். ஓன்பது மாதங்கள் எதிர்பார்ப்பிற்குப் பின், எழுத்தராக ஒரு கம்பெனியில் சேர்ந்தேன். அந்த கம்பெனியும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதால் மீண்டும் வேலையை இழந்தேன்.

நீ இத்தகைய சூழலிலிருந்திருக்கின்றாயா? மோசமான நேரம் முடிந்தது என எண்ணிய போது, திடீரென நிலை தடுமாறியது போலிருந்தது. சாறிபாத் விதவையின் நிலையைப் போன்றிருந்தது (1 இரா. 17:12). ஒரு பஞ்சத்தின் போது, அவள் தனக்கும் தன் மகனுக்கும் கடைசி உணவைத் தயாரிக்கும் போது, எலியா தீர்க்கதரிசி தனக்குக் கொஞ்சம் அப்பம் தரும்படி கேட்கின்றார். அவள் மனமில்லாமல் சம்மதிக்கின்றாள். தேவன் அவளுக்குத் தொடர்ந்து மாவையும், எண்ணெயையும் கொடுக்கின்றார் (வச. 10-16).

பிற்பாடு, அவளுடைய மகன் சுகவீனப்படுகின்றான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அப்பொழுது அந்த விதவை எலியாவை நோக்கி. “தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும் என் குமாரனைச் சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்?” என்றாள் (வச. 18).

சில வேளைகளில் நாமும் இந்த விதவையைப் போன்று செயல்படுவோம். தேவன் ஏன் நம்மைத் தண்டிக்கின்றார் என வியந்ததுண்டு. இந்தப் பாவ உலகில் தீமையானவைகளும் நடக்கும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.

எலியா இந்தத் தேவையை தேவனிடம் எடுத்துச் செல்கின்றார். உண்மையாய், முழுமனதோடு தேவனிடம் அந்தப் பையனுக்காக ஜெபிக்கின்றார். தேவன் அவனை உயிரோடு எழுப்புகின்றார் (வச. 20-22) எலியாவைப் போன்று நாமும், நாம் நம்பியிருக்கிறவர் ஒரு போதும் நம்மைக் கைவிடுவதில்லை என உணர்ந்து கொள்வோம். தேவனுடைய திட்டத்தின் மீது சார்ந்திருந்து, அதைப் புரிந்து கொள்ளும்படி தேவனிடம் ஜெபிப்போம்.