நானும் என்னுடைய சிநேகிதியும் நடைபயிற்சி செய்தபோது, நாங்கள் வேதத்தின் மீது வைத்துள்ள அன்பைக் குறித்துப் பேசிக் கொண்டாம். அப்பொழுது அவள், “ஓ, நான் பழைய ஏற்பாட்டை அதிகம் விரும்புவதில்லை, அதிலுள்ள கடினமான காரியங்களும் பழிவாங்கலும் – நான் விரும்பவில்லை!” – இயேசுவே வேண்டும் எனக் கூறியது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

நாகூம் போன்ற புத்தகங்களைப் படிக்கும் போது, நாமும் என் சிநேகிதியின் கருத்தை ஒத்துக் கொள்வோம். “கர்த்தர் நீதியைச் சரிகட்டுகிறவர், உக்கிர கோபமுள்ளவர்;” (நாகூம் 1:2) என்ற வார்த்தை நம்மைத் கலங்கச் செய்கிறது. ஆயினும் இதற்கு அடுத்த வார்த்தை நம்மை நம்பிக்கையால் நிரப்புகிறது. “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்” (வச. 3). தேவனுடைய கோபத்தைக் குறித்து இன்னும் சற்று ஆழமாக ஆராய்வோமாயின், அவர் தமது கோபத்தைச் செயல்படுத்துவது, தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கவும், அவருடைய பெயரை நிலைநிறுத்தவுமே என்பதைப் புரிந்து கொள்வோம். தேவன் நம்மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதால், நாம் செய்த தவறுகளுக்கு நியாயத்தைச் செய்யவும், தம்மை விட்டுத் திரும்பிச் சென்றவர்களை மீட்கும் பொருட்டாகவும் தம்முடைய கோபத்தைக் காண்பிக்கின்றார். அவரைவிட்டுச் சென்றவர்களை மீண்டும் அவரிடம் அழைக்கும் நிகழ்வுகளை நாம் பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்லும் காண்கின்றோம். எப்படியெனில், நம்முடைய பாவங்களுக்கு பலியாக அவர் தமது சொந்த குமாரனையே அனுப்புகின்றார்.

தேவனுடைய இந்தப் புதிரான குணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவர் நியாயத்தைச் செயல்படுத்துபவர் மட்டுமல்ல, அவரே அன்பின் ஊற்று என்பதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். அவருக்கு நாம் பயப்படத்தேவையில்லை, ஏனெனில், “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அவர் அறிந்திருக்கிறார்”
(வச. 7).