அவளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த திருமண தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாராவின் நிச்சயதார்த்தம் முறிந்து விட்டது. அவளுடைய கவலை, ஏமாற்றம் இவைகளின் மத்தியில், அவள் தன்னுடைய திருமண வைபவத்திற்காக வாங்கியிருந்த உணவு வகைகளை வீணாக்கக் கூடாது எனத் தீர்மானம் செய்து, அந்தக் கொண்டாட்டத்தை வேறு வகையில் திட்டமிட்டாள். தன்னுடைய விருந்தினர் பட்டியலை மாற்றியமைத்து, அருகிலுள்ள வீடற்றோர் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களை விருந்திற்கு அழைத்தாள்.

இயேசுவும் இத்தகைய உறவினர் அல்லாதோரிடம் காட்டும் கருணையை விரும்புகின்றார். அவர் பரிசேயரிடம் பேசிய போது, “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்” (லூக். 14:13-14) என்றார். அத்தோடு அவர்கள் உனக்கு பதில் செய்யமாட்டார்கள். ஆனால், உனக்கு தேவனிடமிருந்து ஆசீர்வாதம் வரும் என்றும் கூறினார். தங்களால் எந்த நன்கொடையும் கொடுக்க முடியாத, கவர்ச்சிகரமான உரையாடல் செய்ய முடியாத, அல்லது எந்த சமுதாயத் தொடர்பும் அற்ற மக்களுக்கு உதவுவதையே இயேசுவும் அங்கிகரிக்கின்றார்.

பரிசேயன் ஒருவன் இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த போது, இயேசு இந்த வார்த்தைகளைப் பேசினார். அவருடைய செய்தி இருதயத்தை ஊடுருவுவதாகவும், ஆழமானதாயுமிருந்தது. உண்மையான அன்பு ஆழமானது. அன்பு என்பது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பிறரின் தேவைகளைச் சந்தித்தலாகும். இப்படியே இயேசுவும் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கின்றார். நம்முடைய உள்ளான ஏழ்மையை அவர் காண்கின்றார். அவருடைய வாழ்வையே நமக்காகக் கொடுத்து அவருடைய அன்பை வெளிப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்துவை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டோமென்பது, அவருடைய முடிவில்லாத அன்பிற்குள் பயணித்தலாகும். “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்  இன்னதென்று உணர்ந்து (எபே. 3:18) கண்டறிந்து கொள்ள நம்மனைவரையும் அழைக்கின்றார்.