ஒரு புத்திசாலியான நண்பன் என்னிடம் “நீ எப்பொழுதும்” அல்லது “நீ ஒரு போதும்” என்ற வார்த்தைகளை என்னுடைய சம்பாஷணைகளில் தவிர்த்துவிடுமாறும், முக்கியமாக என்னுடைய குடும்பத்தினரோடு பேசும் போதும் தவிர்க்கும்படியும் கூறினான். நாம் நேசிப்பவர்களிடம் கூட அன்பற்ற வார்த்தைகளைக் கூறி அவர்களை எளிதாக விமர்சனம் செய்துவிடுகின்றோம். ஆனால், நம்முடைய தேவன் நம்மீது வைத்திருக்கும் எல்லையில்லா அன்பில் ஒருபோதும் மாற்றமேயில்லை.
சங்கீதம் 145ல் “யாவரும்”, “எல்லாம்” “எல்லாரும்” என்ற வார்த்தைகள் அதிகம் உள்ளன. “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது” (வச. 9) “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்” (வச. 14) “கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்” (வச. 17). “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்” (வச. 20).
இந்த சங்கீதம், தேவனுடைய அன்பு எல்லையில்லாதது, அவர் பாரபட்சமில்லாமல் எல்லார் மேலும் அன்பு கூருகின்றார் என அநேகமுறை கூறுகின்றது. புதிய ஏற்பாட்டில் இந்த அன்பின் வெளிப்பாட்டை இயேசு கிறிஸ்துவில் காண்கின்றோம். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவா. 3:16).
சங்கீதம் 145ல், “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்” (வச. 18-19) எனக் காண்கின்றோம்.
தேவன் நம்மீது வைத்திருக்கின்ற அன்பு என்றும் நிலையானது, அது ஒருபோதும் ஒழியாது.
தேவன் நம்மீது வைத்திருக்கும் முடிவில்லாத அன்பில் ஒருபோதும் மாற்றமில்லை.