நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.

வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.

நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.

நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).