சில வருடங்களுக்கு முன் என்னோடு பயணம் செய்த ஒருவர், நான் தூரத்துப் பொருட்களைப் பார்க்கச் சிரமப்படுவதைக் கவனித்து ஒன்று செய்தார். அவர் செய்தது ஒரு சிறிய காரியமாயினும் அது என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய கண்ணாடியை கழற்றி அதை என்னைப் போட்டுப் பார்க்கும்படி கூறினார். நான் அவற்றை பயன்படுத்திய போது, என்ன ஆச்சரியம்! என்னுடைய மங்கலான பார்வை மறைந்து தெளிவாகப் பார்க்க முடிந்தது. உடனடியாக நான் ஒரு கண் மருத்துவரை அணுகினேன். அவர் என் பார்வையை சரிசெய்யக் கூடிய ஒரு கண்ணாடியை எனக்குப் பரிந்துரைத்தார்.
இன்றைய வேதாகமம் பகுதி லூக்கா 18, முற்றிலும் பார்வையிழந்த ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிடுகிறது. முழுவதும் இருளிலேயே வாழ்ந்து வருகின்ற அவன் தன்னுடைய வாழ்வுக்காக வேண்டும்படி தூண்டப்படுகின்றான். பிரசித்திப் பெற்ற போதகர், அற்புதம் நிகழ்த்துபவர் என்று இயேசுவைக் குறித்த செய்தி அந்த குருட்டுப் பிச்சைக்காரனின் செவிகளை அடைகிறது. அந்த குருடன் அமர்ந்திருக்கின்ற வழியே இயேசு வந்தபோது, அவனுடைய இருதயத்தினுள் நம்பிக்கை எரியத் துவங்குகிறது. “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 37) எனக் கூப்பிடுகின்றான். அவன் வெளியுலகைப் பார்க்கக்கூடாதிருந்தும், அவனுடைய ஆவியின் கண்கள் இயேசுவின் உண்மையான அடையாளத்தை கண்டு கொண்டன. அவனுக்குள்ளிருந்த நம்பிக்கை அவனுடைய தேவையைச் இயேசு சந்திப்பார் என்றது. அவனுடைய நம்பிக்கையின் தூண்டுதலால், இன்னும் சத்தமாக கூப்பிடுகின்றான். “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 38) விளைவு என்ன? அவனுடைய குருட்டுத் தன்மை மாறியது. தன்னுடைய வாழ்விற்காகப் பிச்சையெடுத்தலை விட்டுவிட்டு, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே அவருக்குப் பின் சென்றான் (வச. 43), ஏனெனில், இப்பொழுது அவனால் பார்க்க முடிகிறது.
உன் வாழ்வின் இருண்ட காலங்களில் நீ எங்கே செல்கின்றாய்? எதை நோக்கி அல்லது யாரைக் கூப்பிடுகின்றாய்? கண் கண்ணாடிக்கான பரிந்துரை ஒருவரின் பார்வையை மேம்படுத்திக்கொள்ள உதவலாம். ஆனால், இயேசுவின், தேவனுடைய குமாரனின் கிருபை நிறைந்த தொடுதல் மக்களை ஆவியின் இருளிலிருந்து வெளிச்சத்திற்குள் கொண்டு வருகிறது.
தன்னிடம் கேட்பவர்களுக்குத் தெளிவான பார்வையைத் தருவதே பரமபிதாவின் மகிழ்ச்சியாகும்.