என்னுடைய தந்தை தன்னுடைய 58வது வயதில் மரித்தார். அதிலிருந்து நான் அந்த நாளைக் கடக்கும் போதெல்லாம் அவரையும், அவர் என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைக்கத் தவறியதில்லை. நான் என் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தபோது, நான் அவரோடு செலவிட்ட நாட்களை விட அவரில்லாமல் வாழ்ந்த நாட்களே அதிகம். நான் எனது குறுகியகால வாழ்க்கையைக் குறித்துக் சிந்திக்கலானேன்.
நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளும், அது ஏற்படுத்திய உணர்வுகளும் நமக்குள்ளே போராட்டங்களை ஏற்படுத்தி நம்மைக் கலங்கச் செய்கின்றன. நாம் காலத்தை கடிகாரம் மற்றும் நாட்காட்டிகள் மூலம் அறிந்தாலும், சில காலங்களை, அதில் ஏற்பட்ட நிகழ்வுகள் மூலமாகவே நினைவுகூருகின்றோம். நம்முடைய வாழ்க்கையில் ஆழமான உணர்வுகள் தூண்டப்படுகின்ற வேளைகளில் நாம் மகிழ்ச்சி, இழப்பு, ஆசீர்வாதம், வலி, வெற்றி, தோல்விகளை அநுபவித்திருக்கலாம்.
வேதாகமம் நம்மை ஊக்குவிப்பதென்னவெனின், “ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள், தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்” (சங். 62:8) இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைத் தாவீது இலேசான நேரத்தில் எழுதவில்லை. தாவீது தன்னை எதிரிகள் சூழ்ந்து கொண்டபோது இவற்றை எழுதுகின்றார் (வச. 3-4). அவர் தேவ சமூகத்தில் அமைதியாகக் காத்திருக்கின்றார். (வச. 1,5). நாம் எதிர்நோக்குகின்ற போராட்டம் நிறைந்த நேரங்களை விட அவருடைய மாறாத அன்பு பெரிதென்று நினைவுபடுத்துகின்றார் (வச. 12).
தேவன் நம்மோடு இருக்கிறார், வாழ்வின் எல்லா நேரங்களிலும் நம்மைச் சுமந்து, வழிநடத்த அவர் போதுமானவராக இருக்கின்றார் என்ற நம்பிக்கை நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நமக்கு உறுதியைத் தருகிறது. ஒருவேளை வாழ்வில் சில நேரங்கள் நம்மை மேற்கொள்ளுவது போல பயமுறுத்தினாலும் அவருடைய உதவி சரியான நேரத்தில் நமக்கு வரும்.
நம் வாழ்வின் எல்லா நேரங்களிலும் தேவன் நம்மோடிருக்க ஆயத்தமாயிருக்கிறார்.