மனிதன் வடிவில் தேவன்
என்னுடைய கணவர் ஒரு மாதம் வெளியூர் செல்ல நேரிட்டதால், நான் என்னுடைய வேலை, வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு என அதிக வேலைப் பளுவால் கஷ்டப்பட்டேன். நான் எழுதிக் கொண்டிருந்த ஒன்றினை முடிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. புல் வெட்டும் கருவி பழுதடைந்தது. என்னுடைய குழந்தைகள் பள்ளி விடுமுறையிலிருந்த படியால் வீட்டில் முடங்கிக் கிடந்தனர். எப்படி நான் ஒருத்தியாக இத்தனை காரியங்களையும் கவனிக்க முடியும்?
சீக்கிரத்தில் நான் தனிமையாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எங்கள் ஆலயத்தைச் சேர்ந்த நண்பர்கள் உதவ முன் வந்தனர். ஜோஸ் புல் வெட்டும் கருவியை சரி செய்ய உதவினார். ஜான் எனக்கு மதிய உணவு கொண்டு வந்தார், அபி என்னுடைய குழந்தைகளை அவளின் குழந்தைகளோடு விளையாட அழைத்துச் சென்றாள். எனவே நானும் என்னுடைய வேலையை முடிக்க உதவியாக இருந்தது. தேவன் இந்த ஒவ்வொரு நண்பர் மூலமாகவும் என் தேவைகளைச் சந்தித்தார். இவர்களனைவரும் ரோமர் 12ல் பவுல் குறிப்பிட்டுள்ள சமுதாயத்தை வாழ்ந்து காட்டினர். அவர்கள் உண்மையாய் நேசித்தார்கள் (வச. 9) இவர்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து (வச. 10), நான் தேவையிலிருந்த போது என்னோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுடைய உபசரிக்கும் குணத்தைக் காட்டினர் (வச. 13).
என்னுடைய நண்பர்கள் காட்டிய அன்பினால் நான் ‘‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்கவும்,” ‘‘உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கவும் (வச. 12) தனிமையாக, ஒரு மாதத்திற்கு சில துன்பங்களையும் சகிக்கவும் முடிந்தது. என்னுடைய ஒரு சிநேகிதி சொன்னது போல, கிறிஸ்துவுக்குள் சகோதர, சகோதரிகள் மனித வடிவில் வந்த கடவுளாக எனக்கிருந்தனர். அவர்கள் காட்டிய உண்மையான அன்பை, நாமும் பிறரிடம் காட்ட வேண்டும். முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு (கலா. 6:10) காட்ட வேண்டும். நானும் அவர்களைப் போல இருக்க விரும்புகின்றேன்.
என்னை யாரும் விரும்பவில்லை
நான் குழந்தையாயிருந்தபோது, தனிமையையும், யாவராலும் புறக்கணிக்கப்பட்டவளாகவும் உணர்ந்து என்னைக் குறித்து நானே வருந்திக் கொள்ளும்போது, என் தாயார் என்னை மகிழ்விப்பதற்காக ஓர் எளிய பிரசித்திப் பெற்ற பாடலைப் பாடுவதுண்டு. ‘‘என்னை யாரும் விரும்புவதில்லை, எல்லாரும் என்னை வெறுக்கின்றனர், நான் புழுக்களைத் தான் தின்னப் போகிறேன்” என்பது அப்பாடல். என்னுடைய தளர்ந்த முகத்தில் புன்சிரிப்பு வந்ததும், என் தாயார் எனக்குள்ள உண்மையான உறவினர்களையும், நான் அதற்கு எத்தனை நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்கள்.
தாவீது ராஜாவும் தன்னைப் பற்றிக் கரிசனைக் கொள்ள யாருமில்லை என கூறுவதை நான் வாசித்த போது, என் காதினுள் அந்த எளிய பாடல் ஒலித்தது. தாவீது தன் வேதனைகளை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் என்னுடைய தனிமையுணர்வு என் போன்ற வயதினர் அநேகருக்கு ஏற்படுவதுதான். தாவீது கைவிடப்பட்டவராக உணர்வதற்கு காரணமிருக்கிறது. சவுல் ராஜா, தாவீதைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கையில் இந்த வார்த்தைகளை எழுதுகின்றார் (1 சாமு. 22:1, 24:3-10). தாவீது இஸ்ரவேலரின் எதிர்கால அரசனாக அபிஷேகிக்கப்பட்டான் (16:13). அவன் அநேக வருடங்கள் சவுல் ராஜாவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது பயத்தினால் தன் ஜீவனைத் தப்புவிக்க ஓடிக் கொண்டிருக்கிறான். தனிமையின் மத்தியில் தாவீது தேவனை நோக்கி, ‘‘நீரே என் அடைக்கலமும் ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர்” (சங். 142:5) எனக் கதறுகின்றார்.
நாமும் தனிமையையுணரும் போது தாவீதைப் போன்று தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். அவருடைய அன்பின் அடைக்கலத்தினுள் நம்முடைய கூப்பிடுதலுக்கு பதிலளிக்கமாறு கேட்போம். தேவன் நம் தனிமையை மாற்றுவதில்லை. மாறாக நம்முடைய வாழ்வின் இருண்ட குகையில் நம்முடைய துணையாயிருக்கின்றார். நம்மைக் கவனிப்பார் யாருமில்லை என உணரும் வேளைகளில், தேவன் நம்மைக் கவனிக்கின்றார்.
எதிர்பாராத ஞானம்
சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பெண்மணி தன்னுடைய இளம் வயது மகன் ஒரு வன்முறை செயலைப் பற்றிய செய்தி தொகுப்பினைப் பார்ப்பதாகவும், தான் உடனடியாக அந்த ஒளித்தடத்தை மாற்றி விட்டதாகவும் என்னோடு பகிர்ந்து கொண்டாள். மேலும், நீ இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை என அவனிடம் கூறினாள். நாங்கள் இதனைக் குறித்து விவாதித்தோம். அவனுடைய மனதை ‘‘ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ...” (பிலிப். 4:8) அவற்றால் நிரப்ப வேண்டும் என்று கூறினாள். இரவு உணவிற்குப் பின் அவளும் அவளுடைய கணவரும் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்களின் ஐந்து வயது பெண் டெலிவிஷனை நிறுத்திவிட்டாள். ‘‘நீங்கள் இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை” என்று அம்மாவைப் போன்ற குரலில் கூறினாள். மேலும், இப்பொழுது அந்த வேத வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்” என்றாள்.
மூத்தோர்களாகிய நாம் சிறுவர்களையும்விட மேலாகச் செய்திகளைக் கிரகிக்கவும் அவற்றை மனதில் இருத்தவும் முடியும். எனினும், அந்த தம்பதியினரின் பெண் பிள்ளை வேடிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் தன்னுடைய தாயின் அறிவுரைகளை செயலில் வெளிப்படுத்தினாள். நன்கு முதிர்ச்சி பெற்ற பெரியவர்கள்கூட வாழ்வின் இருண்ட பகுதிகளையே பார்த்துக் கொண்டிருந்தால் பாதிக்கப்படுவர். இத்தகைய காரியங்களைக் குறித்து சிந்தித்த பவுல், பிலிப்பியர் 4:8 ல் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். இது, இந்த உலகின் இருண்ட பகுதிகளையே பார்ப்பதால் நம்மில் படிந்து விடும் மன அழுத்தங்களை நீக்குவதற்கான வலிமை வாய்ந்த மருந்தாகும்.
நம்முடைய மனதை நிறைத்துள்ளவற்றைக் குறித்து கவனமாக முடிவுகள் எடுப்பதற்கு மிகச் சிறந்த வழி, தேவனைக் கனம் பண்ணி நம் இருதயத்தையும் அவருக்கேற்றபடி காத்துக் கொள்வதேயாகும்.
உருண்டு, புரண்டு...
உன்னை இரவில் தூங்க விடாமல் விழித்திருக்கச் செய்வதெது? சில நாட்களாக நான் தூக்கத்தை இழந்து, என் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டு, ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதன் காரணமாக நான் அடுத்த நாளின் சவால்களைச் சந்திக்கத் தேவையான ஓய்வு சரியாகக் கிடைக்கப் பெறாமல் முறுமுறுத்தேன்.
இது உங்களுக்கும் ஏற்பட்டுள்ளதா? உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், நம்பிக்கையற்ற எதிர்காலம், எதுவாக இருப்பினும் நம் அனைவருக்குமே ஏதாவது ஒன்றைக் குறித்து கவலை வந்து விடுகிறது.
சங்கீதம் 4 ஐ எழுதும்போது தாவீது ராஜா நிச்சயமாக துயரத்தில் தான் இருந்திருக்க வேண்டும். ஜனங்கள் அவரைக் குறித்துப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி அவருடைய புகழை அழிக்கப் பார்க்கின்றனர் (வச. 2) சிலர் அவர் ஆட்சித்திறமையற்றவர் என குற்றம் சாட்டுகின்றனர் (வச. 6). இப்படி நியாயமில்லாமல் நடந்து கொண்டமையால் தாவீது ராஜாவிற்கு கோபம் வந்திருக்கலாம். அவரும் இவற்றைக் குறித்து சிந்தித்து, தூக்கமின்றி இரவைக் கழித்திருக்கலாம். ஆனால் அவர், ‘‘சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்” (வச. 8) என்று குறிப்பிடுகின்றார்.
இந்த 8வது வசனத்தை சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அழகாக விளக்குகின்றார். ‘‘இவ்வாறு (தாவீது) படுத்திருக்கும் போது, தன்னை முற்றிலுமாக மற்றொருவரின் கரத்தில் ஒப்படைத்து விடுகின்றார். தன் கவலைகளையெல்லாம் அவரிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நித்திரை செய்கின்றார். இதுதான் முழுமையான நம்பிக்கை.”
இந்த நம்பிக்கையைத் தருவது எது? துவக்கத்திலிருந்தே தாவீது ராஜாவிற்கு தன் விண்ணப்பங்களுக்குத் தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையிருந்தது (வச. 3). தேவன் தன் மீது அன்பு கூர்ந்து, தன்னைத் தெரிந்து கொண்டமையால் தன்னுடைய தேவைகளையும் அவர் அன்போடு சந்திப்பார் என்ற உறுதி அவருக்கிருந்தது.
நம்முடைய கவலைகள் நம்மை அச்சுறுத்தும் போது நாமும் அவருடைய வல்லமையைச் சார்ந்திருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஆளுகை செய்யும் அவருடைய வல்லமையுள்ள கரங்களில் நாம் ‘‘படுத்து நித்திரை” செய்வோம்.
பபுஸ்கா என்ற மர்மப் பெண்
1963 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கொலை செய்யப்பட்ட போது நடந்த மர்மங்களில் பபுஸ்கா பெண்ணும் உண்டு. கேமராவின் மூலம் பதிவு செய்யப்பட்ட தொடர் படங்களில் தெரிந்த அந்த பபுஸ்கா பெண் மர்மமாக மறைந்து விட்டாள். இந்த மர்ம பெண் ரஷ்ய நாட்டு பபுஸ்கா பொம்மையைப் போன்று மேல் அங்கியையும் தலையில் ஒரு துணியையும் கட்டியிருந்தாள் (ருஷ்ய பபுஷ்கா என்பது முக்காடுபோல் தலையில் போடும் ஒரு முக்கோண வடிவத் துண்டு. இருமுனைகளை நாடியின் கீழ் கட்டிக்கொள்வார்கள்). அந்தப் பெண்ணை அடையாளம் காண முடியவில்லை. அவளுடைய படமும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக சரித்திர ஆசிரியர்களும், கற்றவர்களும் கூறுவதென்னவெனின், அந்த நவம்பர் இருண்ட நாளில் நடந்தவற்றைக் கூற முடியாதபடி அந்த பபுஸ்கா பெண்ணை பயம் தடுத்துவிட்டது.
இயேசுவின் சீடர்களும் ஏன் ஒளிந்து கொண்டனர் என்பதைப் புரிந்து கொள்ள எந்த யூகமும் தேவையில்லை. இயேசுவைக் கொன்ற அதிகாரிகளுக்குப் பயந்து சீஷர்கள் தாங்கள் கண்ட உண்மைகளை முன் வந்து கூறுவதற்கு தயக்கம் காட்டியதால், சீடர்கள் பயத்தாலும் கோழைத்தனத்தாலும் ஒளிந்து கொண்டனர். (யோவா. 20:19) ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தார். சீடர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். முன்பு பயந்திருந்த இயேசுவின் சீடர்களை இப்பொழுது அமைதிப்படுத்த முடியவில்லை. பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட சீமோன் பேதுரு பெலனடைந்து, ‘‘ஆகையினால், நீங்கள் சிலுவையிலே அறைந்த இந்த இயேசுவை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்” (அப். 2:36) என வெளிப்படுத்தினார்.
இயேசுவின் நாமத்தினை தைரியமாகப் பேசுவதற்கான வாய்ப்புகள், வல்லமையான மனிதர்களுக்கும் அல்லது ஊழியம் செய்வதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளதா? இல்லை. நமக்குள்ளே வாசம் பண்ணும் ஆவியானவர். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை யாவருக்கும் கூறும்படி நம்மை பெலப்படுத்துகிறார். அவருடைய பெலத்தினால் நாம் தைரியம் கொண்டு நமது இரட்சகரைப் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்.