ஹெலிகாப்டர் ஓட்டியாக இருபது ஆண்டுகள் நாட்டிற்குச் சேவை செய்தபின், ஜேம்ஸ் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி, அவனுடைய சமுதாயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினான். ஆனால் அவன் ஹெலிகாப்டர்களை மிகவும் நேசித்தபடியால் அருகிலுள்ள மருத்துவமனையில், மருத்துவ உதவி செய்வதற்காக பயன்படுத்திய ஹெலிகாப்டரை ஓட்டும் வேலையில் சேர்ந்தான். தன்னுடைய வாழ்வில் இறுதிவரை பறப்பதிலேயே செலவிட்டான்.
இப்பொழுது அவனை வழியனுப்ப வேண்டிய வேளை வந்தது. அவனுடைய நண்பர்களும், குடும்பத்தினரும், அவனோடு பணி புரிந்த இராணுவ உடையணிந்த சில வீரரும் ஆயத்தமாகக் கல்லறைத் தோட்டத்தில் நின்றனர். அவனுடைய சக வேலையாள் ஒருவன் ரேடியோவில் கடைசி அழைப்பு கொடுத்தார். உடனே ஒரு ஹெலிகாப்டரின் மின் விசிறியின் சுழலோசை காற்றைக் கிழித்துக் கொண்டு கிளம்பி அந்த நினைவிடத்தின் மேலே வட்டமிட்டது. பின்னர் அது ஓர் இடத்தில் நிலையாக நின்று மரியாதை செலுத்தியது. பின்னர் அது மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றது. அங்கு வந்திருந்த இராணுவ வீரர்களால் கூடத் தங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சவுல் ராஜாவும், அவனுடைய குமாரன் யோனத்தானும் யுத்தத்தில் கொல்லப்பட்ட போது, தாவீது ஒரு பாடலை எழுதினான். அது வில்லின் புலம்பல் எனப் பட்டது. (2 சாமு. 1:17) “இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று.” “பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள்” (வ. 19) என்று பாடினான். யோனத்தான் தாவீதின் உற்ற நண்பனும், மைத்துனனுமாவான். தாவீதும் சவுலும் எதிரிகளாயிருந்த போதும், தாவீது அவர்களிருவரையும் கனம் பண்ணினான். ‘‘சவுலுக்காக அழுது புலம்புங்கள்,” “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன். (வச. 24, 26) என எழுதினான்.
மிகச் சிறந்த விடை பெறல் மிகவும் கடினமானது. ஆனால் தேவன் பேரில் நம்பிக்கையாயிருப்போருக்கு, அந்த நினைவுகள் கசப்பைவிட இனிமையைத் தரும். பிறருக்காக பணி புரிந்தவர்களைக் கனம் பண்ணுவது எத்தனை நன்மையானது.
தேவனுடைய படைப்புகளின் நினைவை நாம் கனம் பண்ணும் போது
நாம் நம்மைப் படைத்த தேவனைக் கனம் பண்ணுகிறோம்.