என்னுடைய கணவர் ஒரு மாதம் வெளியூர் செல்ல நேரிட்டதால், நான் என்னுடைய வேலை, வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு என அதிக வேலைப் பளுவால் கஷ்டப்பட்டேன். நான் எழுதிக் கொண்டிருந்த ஒன்றினை முடிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. புல் வெட்டும் கருவி பழுதடைந்தது. என்னுடைய குழந்தைகள் பள்ளி விடுமுறையிலிருந்த படியால் வீட்டில் முடங்கிக் கிடந்தனர். எப்படி நான் ஒருத்தியாக இத்தனை காரியங்களையும் கவனிக்க முடியும்?
சீக்கிரத்தில் நான் தனிமையாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எங்கள் ஆலயத்தைச் சேர்ந்த நண்பர்கள் உதவ முன் வந்தனர். ஜோஸ் புல் வெட்டும் கருவியை சரி செய்ய உதவினார். ஜான் எனக்கு மதிய உணவு கொண்டு வந்தார், அபி என்னுடைய குழந்தைகளை அவளின் குழந்தைகளோடு விளையாட அழைத்துச் சென்றாள். எனவே நானும் என்னுடைய வேலையை முடிக்க உதவியாக இருந்தது. தேவன் இந்த ஒவ்வொரு நண்பர் மூலமாகவும் என் தேவைகளைச் சந்தித்தார். இவர்களனைவரும் ரோமர் 12ல் பவுல் குறிப்பிட்டுள்ள சமுதாயத்தை வாழ்ந்து காட்டினர். அவர்கள் உண்மையாய் நேசித்தார்கள் (வச. 9) இவர்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து (வச. 10), நான் தேவையிலிருந்த போது என்னோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுடைய உபசரிக்கும் குணத்தைக் காட்டினர் (வச. 13).
என்னுடைய நண்பர்கள் காட்டிய அன்பினால் நான் ‘‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்கவும்,” ‘‘உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கவும் (வச. 12) தனிமையாக, ஒரு மாதத்திற்கு சில துன்பங்களையும் சகிக்கவும் முடிந்தது. என்னுடைய ஒரு சிநேகிதி சொன்னது போல, கிறிஸ்துவுக்குள் சகோதர, சகோதரிகள் மனித வடிவில் வந்த கடவுளாக எனக்கிருந்தனர். அவர்கள் காட்டிய உண்மையான அன்பை, நாமும் பிறரிடம் காட்ட வேண்டும். முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு (கலா. 6:10) காட்ட வேண்டும். நானும் அவர்களைப் போல இருக்க விரும்புகின்றேன்.
இன்று நான் யாருக்கு தேவன் அனுப்பிய நபராகச் செயல்படப் போகின்றேன்?