உன்னை இரவில் தூங்க விடாமல் விழித்திருக்கச் செய்வதெது? சில நாட்களாக நான் தூக்கத்தை இழந்து, என் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டு, ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதன் காரணமாக நான் அடுத்த நாளின் சவால்களைச் சந்திக்கத் தேவையான ஓய்வு சரியாகக் கிடைக்கப் பெறாமல் முறுமுறுத்தேன்.

இது உங்களுக்கும் ஏற்பட்டுள்ளதா? உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், நம்பிக்கையற்ற எதிர்காலம், எதுவாக இருப்பினும் நம் அனைவருக்குமே ஏதாவது ஒன்றைக் குறித்து கவலை வந்து விடுகிறது.

சங்கீதம் 4 ஐ எழுதும்போது தாவீது ராஜா நிச்சயமாக துயரத்தில் தான் இருந்திருக்க வேண்டும். ஜனங்கள் அவரைக் குறித்துப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி அவருடைய புகழை அழிக்கப் பார்க்கின்றனர் (வச. 2) சிலர் அவர் ஆட்சித்திறமையற்றவர் என குற்றம் சாட்டுகின்றனர் (வச. 6). இப்படி நியாயமில்லாமல் நடந்து கொண்டமையால் தாவீது ராஜாவிற்கு கோபம் வந்திருக்கலாம். அவரும் இவற்றைக் குறித்து சிந்தித்து, தூக்கமின்றி இரவைக் கழித்திருக்கலாம். ஆனால் அவர், ‘‘சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்” (வச. 8) என்று குறிப்பிடுகின்றார்.

இந்த 8வது வசனத்தை சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அழகாக விளக்குகின்றார். ‘‘இவ்வாறு (தாவீது) படுத்திருக்கும் போது, தன்னை முற்றிலுமாக மற்றொருவரின் கரத்தில் ஒப்படைத்து விடுகின்றார். தன் கவலைகளையெல்லாம் அவரிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நித்திரை செய்கின்றார். இதுதான் முழுமையான நம்பிக்கை.”

இந்த நம்பிக்கையைத் தருவது எது? துவக்கத்திலிருந்தே தாவீது ராஜாவிற்கு தன் விண்ணப்பங்களுக்குத் தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையிருந்தது (வச. 3). தேவன் தன் மீது அன்பு கூர்ந்து, தன்னைத் தெரிந்து கொண்டமையால் தன்னுடைய தேவைகளையும் அவர் அன்போடு சந்திப்பார் என்ற உறுதி அவருக்கிருந்தது.

நம்முடைய கவலைகள் நம்மை அச்சுறுத்தும் போது நாமும் அவருடைய வல்லமையைச் சார்ந்திருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஆளுகை செய்யும் அவருடைய வல்லமையுள்ள கரங்களில் நாம் ‘‘படுத்து நித்திரை” செய்வோம்.