1963 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கொலை செய்யப்பட்ட போது நடந்த மர்மங்களில் பபுஸ்கா பெண்ணும் உண்டு. கேமராவின் மூலம் பதிவு செய்யப்பட்ட தொடர் படங்களில் தெரிந்த அந்த பபுஸ்கா பெண் மர்மமாக மறைந்து விட்டாள். இந்த மர்ம பெண் ரஷ்ய நாட்டு பபுஸ்கா பொம்மையைப் போன்று மேல் அங்கியையும் தலையில் ஒரு துணியையும் கட்டியிருந்தாள் (ருஷ்ய பபுஷ்கா என்பது முக்காடுபோல் தலையில் போடும் ஒரு முக்கோண வடிவத் துண்டு. இருமுனைகளை நாடியின் கீழ் கட்டிக்கொள்வார்கள்). அந்தப் பெண்ணை அடையாளம் காண முடியவில்லை. அவளுடைய படமும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக சரித்திர ஆசிரியர்களும், கற்றவர்களும் கூறுவதென்னவெனின், அந்த நவம்பர் இருண்ட நாளில் நடந்தவற்றைக் கூற முடியாதபடி அந்த பபுஸ்கா பெண்ணை பயம் தடுத்துவிட்டது.
இயேசுவின் சீடர்களும் ஏன் ஒளிந்து கொண்டனர் என்பதைப் புரிந்து கொள்ள எந்த யூகமும் தேவையில்லை. இயேசுவைக் கொன்ற அதிகாரிகளுக்குப் பயந்து சீஷர்கள் தாங்கள் கண்ட உண்மைகளை முன் வந்து கூறுவதற்கு தயக்கம் காட்டியதால், சீடர்கள் பயத்தாலும் கோழைத்தனத்தாலும் ஒளிந்து கொண்டனர். (யோவா. 20:19) ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தார். சீடர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். முன்பு பயந்திருந்த இயேசுவின் சீடர்களை இப்பொழுது அமைதிப்படுத்த முடியவில்லை. பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட சீமோன் பேதுரு பெலனடைந்து, ‘‘ஆகையினால், நீங்கள் சிலுவையிலே அறைந்த இந்த இயேசுவை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்” (அப். 2:36) என வெளிப்படுத்தினார்.
இயேசுவின் நாமத்தினை தைரியமாகப் பேசுவதற்கான வாய்ப்புகள், வல்லமையான மனிதர்களுக்கும் அல்லது ஊழியம் செய்வதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளதா? இல்லை. நமக்குள்ளே வாசம் பண்ணும் ஆவியானவர். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை யாவருக்கும் கூறும்படி நம்மை பெலப்படுத்துகிறார். அவருடைய பெலத்தினால் நாம் தைரியம் கொண்டு நமது இரட்சகரைப் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்.
கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற அன்பினைக் குறித்து யாரெல்லாம் கேட்க ஆயத்தமாயிருக்கின்றனர்களோ அவர்களிடம் சொல்.