எங்களது வெல்வெட் என்ற பூனைக்குட்டி சமையலறையில் உணவுப் பொருட்கள் வைக்கும் பகுதியினுள் சென்று வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளைத் தின்று விட்டிருந்ததை என் தாயார் கண்டுபிடித்து, வெறுப்படைந்து, அதை வீட்டிற்கு வெளியே துரத்திவிட்டாள். பல மணி நேரம் கழித்து, நாங்கள் எங்கள் பூனையை வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மிக மெல்லிய “மியா” குரல் காற்றில் வந்தது. நான் மேலே பார்த்து ஓர் உயரமான மரத்தின் உச்சிக் கிளையொன்றின் மேல் எங்கள் பூனை படுத்திருப்பதைக் கண்டேன்.
என்னுடைய தாயாரின் கோபத்திலிருந்து தப்பிக்க, வெல்வெட் ஒரு பாதுகாப்பற்ற இடத்தைத் தேடிக் கொண்டது. இதைப் போன்று நாமும் சில வேளைகளில் நடந்து கொள்கிறோம். நம்முடைய தவறுகளிலிருந்து ஓடி பாதுகாப்பற்ற இடத்தில் அகப்பட்டுக் கொள்கின்றோம். அப்படியிருந்தும் தேவன் நம்மை விடுவிக்க வருகின்றார்.
தீர்க்கதரிசி யோனா, நினிவேயில் பிரசங்கிக்க தேவனால் அழைப்பைப் பெற்றபோது, அதை விரும்பாமல், கீழ்ப்படியாமல் ஓடி ஒரு பெரிய மீனால் விழுங்கப்பட்டான். ‘‘அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.”
அவன், ‘‘என நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் அவர் எனக்கு உத்தரவு அருளினார்” (யோனா 2:1-2) என்றான். தேவன் யோனாவின் வேண்டுதலைக் கேட்டு கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார். அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது (வச. 10) யோனாவுக்கு மீண்டும் தேவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (3:1).
நாங்கள் வெல்வெட்டை கீழே இறக்க எடுத்த முயற்சிகளால் சோர்ந்த போது, நாங்கள் அருகிலுள்ள தீயணைப்புத்துறையினரின் உதவியை நாடினோம். மிக உயரமான ஏணியின் உதவியால் ஓர் இரக்கமுள்ள மனிதன் மேலேறி என்னுடைய பூனையை அதன் உயர்ந்த இடத்திலிருந்து எடுத்துப் பத்திரமாக என் கரங்களில் கொடுத்தார்.
நம்முடைய கீழ்ப்படியாமையால் நாம் போயிருக்கின்ற இடம் மிக உயரமாயிருந்தாலும் அல்லது மிக ஆழமானாலும் சரி. தேவன் நம்மைத் தேடி வந்து அவருடைய மீட்கும் அன்பினால் நம்மை மீட்டு கொள்வார்.
இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டார்.