தொலைபேசியில் என்னுடைய மனைவி ‘‘கவனியுங்கள், இங்கு நமது பண்ணையில் ஒரு குரங்கு இருக்கிறது” என்றாள். அவள் தொலைபேசியைக் கையில் வைத்திருக்கும் போதே அதன் உறுமலை என்னால் கேட்க முடிந்தது. அது குரங்கின் சத்தம் தான். இது சாதாரணமாக நடக்கக்கூடியதல்ல. ஏனெனில் காட்டுக்குரங்குகள் நாங்களிருக்கும் இடத்திலிருந்து 2000 மைல்களுக்கப்பால் தான் உள்ளன.
பின்னர் என்னுடைய மாமனார் அதன் உண்மையை வெளிப்படுத்தினார். அது ஒரு கூண்டிலடைக்கப்பட்ட ஆந்தையின் குரல். குரங்கின் ஒலியைப் போன்ற தோற்றம். ஆனால் உண்மையல்ல.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் அரசாட்சியின் போது, அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பின் படைகள் எருசலேமின் அரண்களைச் சுற்றி முற்றிகையிட்டன. அசீரியர்கள் வெற்றி அவர்களுக்கேயென எண்ணினர். ஆனால் உண்மையில் வேறு விதமாய் நடந்தது. அசீரியர்களின் சேனைத் தலைவன் நயமான வார்த்தைகளைப் பேசி, தான் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதைப் போல நடித்தான். ஆனால் தேவனுடைய கரம் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாத்தது.
‘‘இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்க வந்தேனோ?” என அசீரியரின் சேனைத் தலைவன் கேட்கின்றான் (2 இரா. 18:25). அவன் எருசலேமின் ஜனங்களை அடிபணியுமாறு, அவர்களை சம்மதிக்கச் செய்ய முயற்சிக்கின்றான். மேலும் அவன் ‘‘நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்” (வ.32) எனவும் கூறுகின்றான்.
இது ஒருவேளை தேவன் கூறுவது போன்று அவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களிடம் தேவனுடைய உண்மையான வார்த்தைகளைச் சொல்கின்றார். அவன் (சனகெரிப்) இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின் மேல் அம்பு எய்வதுமில்லை; மேலும், ‘‘நான் இந்த நகரத்தை இரட்சிக்கும் படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன்” (19:32-34, 37:35) என்ற கர்த்தருடைய வார்த்தைகளை ஏசாயா சொன்னார். அன்று இராத்திரியில் ‘‘கர்த்தருடைய தூதன் அசீரியர்களைச் சங்கரித்தான் (வச. 35).
தேவனுடைய வல்லமையை மறுத்து நமக்கு நல்ல நளினமான போதனைகளைத் தருகின்ற மக்களை நாம் நாளுக்கு நாள் சந்திக்கின்றோம். அது தேவனுடைய வார்த்தையல்ல. தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசுவார். தேவன் நம்மை அவருடைய ஆவியினால் வழி நடத்துவார் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது அவருடைய கரம் இருக்கும். அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.
தேவன் ஒருவரே எப்பொழுதும் நம்பத்தகுந்தவர்.