நான் வளர்ந்த போது, நானும் என்னுடைய இரண்டு சகோதரிகளும் எங்களுடைய தாயாரின் கேதுரு மரத்தாலான அலமாரியின் மேல் வரிசையாக அமர்ந்து கொள்ள விரும்புவோம். அந்த அலமாரியினுள் என் தாயார் கம்பளி ஆடைகளையும், கை தையல், பின்னல் போன்ற என் பாட்டியின்
கைவேலைப்பாடுகள் நிறைந்த சில துணிகளையும் அங்கு வைத்திருந்தார்கள். என் தாயார் அந்தப் பொருட்களை மிகவும் விலையேறப் பெற்றதாகப் போற்றி, கேதுரு மணம் வீசும் அந்த மரப்பெட்டி பூச்சிகளிடமிருந்து அவற்றைக் காப்பாற்றி பத்திரமாக வைத்திருக்கும் என நம்பினார்.
இவ்வுலகப் பொருட்களெல்லாம் பூச்சிகளாலும் துருவினாலும் எளிதில் அழிக்கப்படலாம், திருடர் திருடலாம். மத்தேயு 6ல் அழிந்து போகக் கூடிய பொருட்களை அல்ல, என்றும் நிலைத்திருக்கும் பொருட்களையே சேர்த்து வைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. என்னுடைய தாயார் தனது 57வது வயதில் மரித்தபோது அவர்கள் இவ்வுலகில் அநேக பொருட்களைச் சேகரித்து வைக்கவில்லை. ஆனால் அவர்கள் பரலோகத்தில் சேமித்து வைத்திருந்ததை நான் நினைத்துப் பார்க்கின்றேன் (வச. 19-20).
அவர்கள் தேவனை நேசித்து அவருக்காகப் பணி செய்ததை நினைத்துப் பார்க்கின்றேன். தன்னுடைய குடும்பத்தை அன்போடு பராமரித்தார், ஞாயிறு பள்ளியில் குழந்தைகளுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்தார். கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணிடம் அன்போடு நடந்து கொண்டார், தன் குழந்தையையிழந்த ஓர் இளம் தாயினைத் தேற்றினார். அவர்களுக்காக ஜெபித்தார். தன்னுடைய பார்வையையிழந்த பின்னரும், ஒரு நகரும் நாற்காலியில் முடங்க நேரிட்ட போதும் மற்றவர்களுக்காக அன்போடு ஜெபிப்பதை விடவில்லை.
நம்முடைய உண்மையான பொக்கிஷம், நாம் சேர்த்துக் குவித்திருப்பதைக் கொண்டு அளவிடப்படுவதில்லை. ஆனால் நம்முடைய அன்பினையும் நேரத்தையும் நாம் எங்கு யாரிடம் செலவிடுகிறோம் என்பதைக் கொண்டே அளவிடப்படுகிறது. பிறருக்குப் பணி செய்து, இயேசுவைப் போல வாழ்ந்து என்ன பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வைத்திருக்கின்றோம்?
நாம் நித்தியத்தில் சேர்த்து வைப்பதே உண்மையான செல்வம்.