சமீபத்தில் அமெரிக்கா தேசத்திற்கு குடிபெயர்ந்த ரிமா என்ற சிரியாவைச் சேர்ந்த பெண்மணி, தன்னுடைய பயிற்சியாளரிடம் தனக்குத் தெரிந்த சிறிய ஆங்கிலம் மற்றும் சைகையின்மூலம் தான் வருத்தத்திலிருப்பதற்கான காரணத்தை விளக்கினாள். அவள் தான் செய்து வைத்திருந்த மாமிசம், பால்கட்டி, மற்றும் கீரைகள் அடங்கிய ரொட்டியை, ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைத்து எடுத்து வந்த போது, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அருகிலுள்ள தேவாலயத்தின் ஜனங்கள் அநேகர் ரிமாவின் வீட்டிற்கு வருவதாயிருந்தது. எனினும் ஒரேயொரு மனிதன் அவள் வீட்டிற்கு வந்தார். அவரும் மிக வேகமாக உள்ளே வந்து, ஒரு பெட்டி நிறைய சாமான்களைக் கொடுத்து விட்டு அவசரமாக வெளியேறினார். அவர் வேகமாக ஒரு கடமையை முடித்தார். ஆனால் ரிமாவும், அவள் குடும்பத்தினரும் தனிமையில் சுற்றத்தாரின் அன்பிற்காகவும் அவர்கள் தங்களோடு நட்பினைப் பகிர்ந்து கொள்வார்களெனவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஜனங்களுக்காக நேரத்தைச் செலவிட்டார் இயேசு. அவர் ஜனங்களோடு உணவருந்தினார். ஜனக்கூட்டத்திற்குக் கற்றுக் கொடுத்தார், போதனை செய்தார், தனி நபர்களோடு உறவாடினார். ஒரு மனிதனின் வீட்டிற்கு வருவதாகக் கூறினார். சகேயு வரி வசூலிப்பவன். அவன் ஒரு மரத்தின் மேலேறி இயேசுவைப் பார்க்க விரும்பினான். இயேசு அவனைப் பார்த்து ‘‘நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” (லூக். 19:1-9) என்று கூறினார். அன்றைக்கே சகேயுவின் வாழ்க்கை முற்றிலும் மாறியது.
நமக்குள்ள வேலைப் பளுவின் மத்தியில் நாம் பிறருக்கு நேரம் செலவிட முடியாதவர்களாகி விடுகின்றோம். ஆனால் நாம் அதற்கென சற்று நேரம் ஒதுக்கும்போது, பிறரோடு சிறிது நேரத்தைச் செலவிடும் பாக்கியத்தைப் பெறுவோம். இதன் மூலம் தேவன் அவர்களோடு செயல்பட ஆரம்பிப்பார்.
பிறருக்கு நீ கொடுக்கக் கூடிய மிகச் சிறந்த வெகுமதி உன்னுடைய நேரமே.