என் மகனின் அறிவியல் ஆசிரியர் நடத்தும் அறிவியல் முகாமுக்கு என்னை ஒரு மேற்பார்வையாளனாக இருக்கும்படி கேட்டார்கள். நான் தயங்கினேன். கடந்தகால தவறுகள் மற்றும் கெட்டப் பழக்கங்களோடு போராடிக்கொண்டிருக்கும் நான், எப்படி ஒரு முன்மாதிரியாக முடியும்? என் மகனை அன்புடனும் பண்புடனும் வளர்க்க ஆண்டவரே உதவினார். ஆனாலும் என்னை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு ஆண்டவரால் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகித்தேன்.

ஒரு சில சமயங்களில், சம்பூரணரும், இருதயங்களையும் வாழ்க்கையையும் மாற்றக்கூடியவருமாகிய ஆண்டவர் ஏற்றகாலத்தில் நம்மை முழுமையாக மறுரூபமாக்குவார் என்பதை என்னால் முழுவதும் கிரகித்துக்கொள்ளமுடியவில்லை. தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதும்போது வேலையில் கிடைக்கும் பயிற்சியை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் நிலைத்திருந்து, தேவன் அவனுக்கு அளித்த வரத்தை பயன்படுத்தும்படி சொன்னதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைப்பூட்டினார் (2 தீமோ. 1:6). தன்னகத்தே உள்ள மக்களுக்கு ஊழியம் புரிந்து அவர்களை வளர்ப்பதற்கு தேவையான அன்பையும், ஒழுக்கத்தையும் (வச. 7) தன் வல்லமையின் ஆதாரமாகிய ஆண்டவர் தனக்கு தருவார் என்பதில் தீமோத்தேயு தைரியம் அடையமுடியும்.

கிறிஸ்து நம்மை இரட்சித்து நம்முடைய வாழ்க்கையின் மூலம் அவரை கனப்படுத்த நம்மை தகுதிபடுத்துகிறார். அதற்கான விசேஷ தகுதி நம்மிடம் இருப்பதினாலன்று, நாம் ஒவ்வொருவரும் அவருடைய குடும்பத்தில் மதிப்பிற்குரிய அங்கத்தினராய் இருப்பதினாலேயே (வச. 9) அது நடக்கிறது.

தேவனிடத்திலும், பிறனிடத்திலும் அன்பாய் இருப்பதே நம்முடைய பங்கு என்பதை நாம் அறிந்துகொண்டால் நம்பிக்கையுடன் முன்னேறலாம். நம்மை இரட்சித்து, உலகத்தை பற்றி நமக்குள்ள குறுகிய தரிசனத்தை மாற்றி நமக்கு ஒரு உன்னத நோக்கத்தை கொடுப்பதே கிறிஸ்துவின் பணி. இயேசுவை நாம் அனுதினமும் பின்பற்றுகையில், அவர் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கெல்லாம் அவருடைய அன்பையும், சத்தியத்தையும் பகிர்ந்து பிறரை உற்சாகப்படுத்தும்போது அவர் நம்மையும் மறுரூபமாக்குகிறார்.