பத்தாண்டுகள் என்னுடைய அத்தை அவர்களுடைய அப்பாவை (என் தாத்தாவை) தன் வீட்டில் வைத்து பராமரித்தார். அவர் நல்ல நிலையில் இருக்கும்போதே அவருக்கு சமைத்து, சுத்தம் செய்து அவருடைய எல்லா காரியங்களையும் பார்த்துக்கொண்டார். அவருடைய ஆரோக்கியம் குன்றியபோதும், அவருக்கு ஒரு செவிலியராக இருந்து தேவையான பணிவிடைகளைச் செய்தார்.
“உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும்…நினைவுகூர்ந்து தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்” (1 தெச. 1:2,4) என்று தெசலோனிக்கேயர் சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின வார்த்தைகளுக்கு இந்த பெண்ணின் சேவை ஒரு நவீன முன்மாதிரி என்று சொல்லலாம்.
அன்புடனும் விசுவாசத்துடனும் என்னுடைய அத்தை பணியாற்றினார். அனுதினமும் அவர் காண்பித்த கரிசனை, இந்த அரிய பணிக்கு தேவன் தன்னை அழைத்துள்ளார் எனும் நம்பிக்கையில் விளைந்த பிரதிபலன். அவர்களது பிரயாசம், தகப்பன்மேலும் தேவன்மேலும் வைத்திருந்த அன்பினால் பிறந்த கனி.
நம்பிக்கையிலும் அவர்கள் பொறுமையாய் சகித்தார்கள். என் தாத்தா மிகவும் அன்பானவர், அவருடைய நலம் குன்றுவதை பார்க்க இயலாமல், அவரை பராமரித்திட, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து தன் போக்குவரத்தையும் குறைத்துக்கொண்டார். தேவன் அவர்களை அனுதினமும் பெலப்படுத்துவார் என்கின்ற விசுவாசமும், தாத்தாவுக்கு காத்திருக்கும் பரலோக நம்பிக்கையுமே அவர்கள் சகிப்பதற்கு உதவியது.
ஒரு உறவினரை கவனிக்கின்ற, பக்கத்து வீட்டாருக்கு உதவிசெய்கின்ற அல்லது தன்னார்வத்துடன் நேரத்தை கொடுக்கின்ற எந்தவொரு காரியமாக இருந்தாலும் தேவன் உங்களைச் செய்யும்படி சொன்ன காரியத்தில் நீங்கள் திடப்படுங்கள். உங்களுடைய பிரயாசமே விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வல்லமையான சாட்சியாக வெளிப்படும்.
வாழ்வின் மேன்மை அன்புகூறுவதே, அன்புகூறப்படுவதில் இல்லை; கொடுப்பதில், வாங்குவதில் இல்லை; பணிவிடை செய்வதில், பணிவிடை பெற்றுக்கொள்வதிலில்லை.