சிலருக்கு கசப்பான சாக்லெட் பிடிக்கும், சிலருக்கு இனிப்பு என்றால் பிரியம். மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இன மக்கள் சாக்லெட்டுடன் காரமான மிளகை சேர்த்து அதனை ஒரு பானமாக அருந்துவர். “கசப்பு தண்ணீர்” என்று அழைத்த இவர்களுக்கு இது ஒரு விருப்ப பானம். அநேக ஆண்டுகளுக்கு பின் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டினர் இனிப்பு சாக்லெட் பிரியர்கள் என்பதால், பானத்தில் உள்ள இயற்கையான கசப்பை குறைக்க சக்கரை மற்றும் தேனை கூடுதலாக சேர்த்துக்கொள்வார்கள்.

ஆம். சாக்லெட்டை போன்றே நம்முடைய நாட்களும் கசப்பு அல்லது இனிப்பு மிக்கவைகளாய் இருக்கலாம். சகோதரர் லாரன்ஸ் என்கின்ற 17-ஆம் நூற்றாண்டு பிரஞ்சு துறவி ஒருவர் இப்படியாக எழுதினார், “ஆண்டவர் நம்மை எவ்வளவாய் அன்புகூருகிறார் என்பதை நாம் அறிந்திருந்தால் அவருடைய கைகளிலிருந்து வரும் இனிப்பையும் கசப்பையும் ஒரேவிதத்தில் எடுக்கப் பழகிக்கொள்வோம்.” இனிப்பையும் கசப்பையும் ஒரே விதத்தில் எடுப்பதா? இது கடினம்! சகோதரர் லாரன்ஸ் என்ன சொல்கிறார்? அதன் திறவுகோல் தேவனுடைய குணநலனுக்குள் மறைந்துள்ளது. சங்கீதக்காரன் ஆண்டவரைப் பற்றிக் கூறுகையில், “தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்” (சங். 119:68) என்று குறிப்பிடுகிறார்.

மாயன் மக்களும் கசப்பான சாக்லெட்டின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ கூறுகளை அறிந்திருந்தனர். கசப்பான நாட்களுக்கு மதிப்பில்லாமல் போவதில்லை. நமது பலவீனங்களை நமக்கு வெளிப்படுத்தி, தேவனையே சார்ந்து வாழ நமக்கு உதவுகிறது. சங்கீதக்காரன் எழுதினார், “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (வச. 71).” இன்றைக்கும், தேவன் நன்மை செய்கிறவராகவே உள்ளார் எனும் நிச்சயத்துடன், வாழ்க்கையை அதன் பல்வேறு சுவைகளுடன், அனுபவிக்க முனைந்திடுவோம். நாமும்கூட “கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” என்று சொல்லிடுவோம் (வச. 65).