அநேக ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும், யாரும் பின்னால் திரும்ப வேண்டாம், இந்த வகுப்பறையின் பின் பக்கச் சுவரின் வண்ணம் என்ன? என்று சொல்லுமாறு கேட்டார். ஒருவராலும் பதிலளிக்க முடியவில்லை. ஏனெனில், நாங்கள் யாருமே அதைக் கவனிக்கவில்லை.
சில வேளைகளில் நாமும் வாழ்வின் சில அம்சங்களைப் பார்க்கத் தவறி விடுகிறோம். ஏனெனில் நம்மால் அவையனைத்தையும் சிந்தனைக்குள் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. சில வேளைகளில் நீண்ட நாட்களாக இருக்கின்ற சிலவற்றைக்கூட பார்க்கத் தவறி விடுகிறோம்.
இதைப் போன்றே, நானும் சமீபத்தில் இயேசு கிறிஸ்து தனது சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்ச்சியை மீண்டும் வாசித்தேன். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஏனெனில் இப்பகுதியை பரிசுத்த வாரத்தில் தவறாது வாசிப்பர். நம்முடைய இரட்சகரும் ராஜாவுமானவர் குனிந்து சீடர்களின் கால்களைக் கழுவுகின்றார். இது நம்மை வியப்படையச் செய்கிறது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூத வேலையாட்கள் கூட இச்செயலைச் செய்வதில்லை, ஏனெனில் அதனை அவர்களின் தகுதிக்குத் தாழ்ந்ததாகக் கருதினார். ஆனால் நான் இப்பகுதியில் கவனிக்கத் தவறியது எதுவெனின், மனிதனாகவும், தேவனாகவும் திகழ்ந்த இயேசு, யூதாசுடைய கால்களையும் கழுவினார். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தும் (யோவா. 13:11) இயேசு தன்னைத் தாழ்த்தி யூதாசின் கால்களையும் கழுவினார்.
அன்பு, ஒரு பாத்திர நீரில் ஊற்றப்பட்டது. தன்னைக் காட்டிக் கொடுப்பவன் மீதும் அவருடைய அன்பு பகிரப்பட்டது. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முந்திய வார நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது, நாமும் தேவனுடைய ஈவாகிய தாழ்மையைப் பெற்றுக் கொண்டு, இயேசுவின் அன்பை நம்முடைய நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் கொடுப்போம்.
அன்பினாலேயே, இயேசு தன்னைத் தாழ்த்தி, அவருடைய சீடர்களின் கால்களைக் கழுவினார்.