ஒரு பனிக்காலத்தில், உலகில் ஐந்தாவது பெரிய ஏரியான மிச்சிகன் ஏரியை, அந்த பகுதி மிகவும் ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும், அதன் மேற்பகுதி உறைந்திருப்பதைப் பார்க்கச் சென்றேன். குளிரைத் தாங்கும் உடைகளைப் போர்த்திக் கொண்டு, அந்த ஏரிக் கரையில் நான் வழக்கமாக சூரிய குளியல் எடுக்குமிடத்தில் நின்று, அந்த பிரம்மிக்கத்தக்க காட்சியைக் கண்டேன். அங்கு நீர் அலை வடிவில் உறைந்து, பனிக்கட்டியின் மிக அற்புதமான தோற்றத்தைக் கொண்டிருந்தது.
அந்த ஏரியில் கரையிலிருந்தே நீர் உறைந்திருந்ததால், நான் ‘‘நீர் மேல் நடக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். அந்த பனி என்னுடைய எடையைத் தாங்கக் கூடிய அளவிற்கு தடிமனானது எனத் தெரிந்திருந்தாலும், நான் முதல் சில அடிகளைத் தாங்கும் எனச் சோதித்தபின்னரே எடுத்து வைத்தேன். இந்த பனி என்னைத் தொடர்ந்து தாங்குமா என எனக்குள்ளேயே பயந்தேன். நான் இந்த பரந்த, பழக்கமற்ற பரப்பை கவனமாக ஆராய்ந்தபோது, இயேசுவும் பேதுருவை படகிலிருந்து இறங்கி கலிலேயாக் கடலின்மேல் நடந்து வரச் சொன்னதை நினைவு கூர்ந்தேன்.
சீடர்கள், இயேசு நீர்மேல் நடந்து வந்ததைப் பார்த்தபோது, அவர்களும் பயந்தனர். ஆனால் இயேசு அவர்களிடம், ‘‘திடன் கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” என்றார் (மத். 14:26-27). பேதுரு தன் பயத்தை மேற்கொண்டு, நீரின்மேல் இறங்கினான். ஏனெனில், இயேசு அங்கேயிருக்கிறாரென அவனுக்குத் தெரியும். ஆனால் அங்கு காற்றையும், அலையையும் பார்த்தபோது இவனுடைய தைரியமான அடிகள் தயங்கின. பேதுரு இயேசுவை நோக்கி கதறுகிறான். இயேசு அங்கே அவனருகில் தன்னுடைய கரத்தை நீட்டி அவனைக் காப்பாற்றும்படி அங்கேயே இருந்தார்.
ஒரு வேளை நீயும் இத்தகைய ஒரு சூழ்நிலையிலிருக்கிறாயா? இயேசு உன்னை நீரின் மேல் நடக்கச் சொல்வதைப் போன்று, ஒரு முடியாத காரியத்தைச் செய்யச் சொல்லுகிறாரா? தைரியமாயிரு. உன்னை அழைத்தவர் உன்னோடு இருக்கிறார்.
நாம் தேவனை நோக்கி கூப்பிடும் போது அவர் கேட்கின்றார்.