என்னுடைய இரண்டாவது குழந்தை, ‘‘பெரிய படுக்கையில் அவளுடைய சகோதரியின் அறையில் தூங்குவதற்கு மிகவும் ஆவலாயிருப்பாள். ஒவ்வொரு இரவும் நான் பிரிட்டாவை போர்வைக்குள் மூடியபின், அவளுடைய படுக்கையில் இருக்கும்படி கண்டிப்பான அறிவுரைகளை வழங்கி, தவறினால் அவளைத் தொட்டில் கட்டிலுக்கு அனுப்பிவிடுவதாக எச்சரிப்பேன். ஒவ்வொரு இரவும் நான் அவளை கூடத்தில் கண்டுபிடித்து மீண்டும், தைரியமிழந்த என்னுடைய அன்பு மகளை அவளுடைய தொட்டிலுக்கு வழி நடத்த வேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கத்தைக் குறித்து தெரிந்து கொண்டேன். தன்னுடைய அறையைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத மூத்த சகோதரி, ஒவ்வொரு நாளும் பிரிட்டாவிடம் அம்மா அவளைக் கூப்பிடுவதாகக் கேட்கிறது எனச் சொல்வாள். பிரிட்டா தன்னுடைய சகோதரியின் வார்த்தையை நம்பி, என்னைத் தேடி வந்து, இப்படியாக மீண்டும் தன்னுடைய தொட்டில் கட்டிலினுள் வந்து சேர்ந்து விடுவாள்.
தவறான சத்தத்திற்குச் செவி கொடுக்கும் போது பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தேவன் ஒரு மனிதனை பெத்தேலுக்கு அனுப்பி, அவர் சார்பாக பேசும் படி சொல்கிறார். தேவன் தெளிவான கட்டளைகளை அவனுக்குக் கொடுக்கிறார். நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் போன வழியாய்த் திரும்பாமலும் இரு (1 இரா. 13:9) என கட்டளையிடுகிறார். யெரொபெயாம் அவனைத் தன்னோடு உணவருந்தும்படி அழைக்கின்றான். ஆனால் தீர்க்கதரிசி மறுத்து, தேவனுடைய அறிவுரையைப் பின்பற்றினான். ஆனால் கிழவனான ஒரு தீர்க்கதரிசி அவனை உணவருந்த அழைத்தபோது அம்மனிதன் முதலில் மறுக்கிறான். பிற்பாடு வற்புறுத்தப்படும் போது அவன் சாப்பிட்டு விடுகிறான். அங்கிருந்த மூத்தவர்கள் தேவதூதன் அவனைச் சாப்பிடக் கூறியதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். நான் என்னுடைய மகள் பிரிட்டா அவள் விரும்பிய பெரிய கட்டிலில் தூங்கட்டும் என்று விரும்பியது போல, தேவனுடைய அறிவுரைக்குச் செவி கொடுக்காத அம்மனிதனைக் குறித்து தேவனும் வருந்தியிருப்பார் என நான் நினைக்கிறேன்.
நாம் தேவனை முற்றிலுமாக நம்ப வேண்டும். அவருடைய வார்த்தைகளே நம் வாழ்விற்கு பாதையைக் காட்டும். நாம் அவற்றைக் கவனிக்கவும் கீழ்ப்படியவும் ஞானமாயிருக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தைகளே நமக்கு மிக முக்கியமானவை.