அந்த சிறு பெண் மகிழ்ச்சியாகவும், நளினமாகவும் ஆராதனை இசைக்குத் தகுந்தாற்போல் அசைந்தாள். அவள் மட்டும் தான் இருக்கைகளுக்கிடையேயுள்ள நடைபாதையில் நின்றதால் அவள் சுழல்வதற்கும், புயங்களை அசைப்பதற்கும், பாதங்களை உயர்த்துவதற்கும் தடையில்லாமலிருந்தது அவளுடைய தாயின் முகத்தில் ஒரு புன்முறுவல், அவள் இந்த சிறு பெண்ணின் அசைவுகளை நிறுத்த முயற்சிக்கவில்லை.
இதைப் பார்த்தபோது, என்னுடைய இருதயமும் அவளோடு இணைந்து ஆட விரும்பியது. ஆனால் செய்யவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்னரே, குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியையும், வியப்பையும், கபடற்ற மனதுடன் தன் உணர்வற்று வெளிப்படுத்தும் குணத்தையும் இழந்துவிட்டேன். நாம் வளரும் போது முதிர்ச்சியடைந்து குழந்தை தன்மையை விட்டுவிட எதிர்பார்க்கப்படுகிறோம். ஆனால் நாம் தேவனோடுள்ள உறவுகளில் மகிழ்ச்சியையும், வியப்பையும் விட்டுவிட எதிர்பார்க்கப்படவில்லை.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் அவர் குழந்தைகளை வரவேற்றார். அடிக்கடி தன்னுடைய போதனைகளில் குழந்தைகளைக் குறிப்பிடுகின்றார் (மத். 11:25 ; 18:3; 21:6). ஒரு சமயத்தில், பெற்றோர் தம் குழந்தைகளை இயேசு ஆசிர்வதிக்கும்படி அவரிடம் கொண்டு வந்தபோது, இயேசுவின் சீடர்கள் அவர்களைத் தடை செய்தனர். சீடர்களை இயேசு கடிந்து கொண்டார். அவர், சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மாற்கு 10:14) எனக் கூறினார். தேவன் குழந்தை போன்ற குணநலன்களையே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளத் தகுந்த குணம் எனக் குறிப்பிடுகிறார் – அவை மகிழ்ச்சி, வியப்பு, எளிமை, சார்ந்திருத்தல், நம்பிக்கை, மற்றும் தாழ்மை.
குழந்தையைப் போன்ற அதிசயித்தலும், மகிழ்தலும் அவரை வரவேற்கும்படி நம்முடைய இருதயங்களைத் திறந்து தரும். அவருடைய புயங்களுக்குள்ளே நாம் ஓடி வரும்படி அவர் நமக்காகக் காத்திருக்கின்றார்.
ஒரு குழந்தையுள்ளம் கொண்ட இருதயத்தில் நம்பிக்கை மிகப் பிரகாசமாக ஜொலிக்கும்.