நான் எனது கம்ப்யூட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது, இமெயில் வருவதைத் தெரிவிக்கும் ஒலி எழும்பி என் கவனத்தை ஈர்த்தது. சாதாரணமாக இத்தகைய ஒலி எழும்பும் போது நான் அந்த இமெயிலைப் பார்க்கும்படி தூண்டப்பட்டாலும் அதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இந்த மெயிலில் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ‘’நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’’ என்பது என்னைக் கவர்ந்தது.

ஆர்வமுடன் நான் அதைத் திறந்து பார்த்து, மிகத் தொலைவிலுள்ள என் சிநேகிதி, என்னுடைய குடும்பத்திற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு வாரமும் அவள் ஒரு குடும்பத்தினரின் படம் ஒன்றினை அவளது ‘ஆசீர்வாதக் கிண்ணமான’ சாப்பாட்டு மேஜையில் வைத்து அந்தக் குடும்பத்திற்காக ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். நான் உங்களை நினைக்கிற பொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (பிலி. 1:6) என எழுதியிருந்தாள். அத்தோடு தேவனுடைய அன்பை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் எங்களுடைய சுவிசேஷப் பணியின் பங்குதாரர் என்பதையும் முக்கியப்படுத்தியிருந்தாள்.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பு சபையினருக்கு எழுதிய இந்த வார்த்தைகள், என் சிநேகிதி விருப்பத்தோடு எடுத்துக் கொண்ட முயற்சியால் என்னுடைய இமெயிலில் வந்தது. இது எனக்களித்த மகிழ்ச்சி, முதலாம் நூற்றாண்டில் இக்கடிதத்தைப் பெற்ற வாசகர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாயிருந்தது. பவுல் தன்னோடு சுவிசேஷகப் பணி செய்தவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்;. உங்கள் விசுவாசம் உலகெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (ரோ. 1:8) என்பதைப் போன்ற வாசகங்களை அவருடைய அநேக கடிதங்களில் நாம் காணலாம்.

முதலாம் நூற்றாண்டிலே பவுல் தன்னோடு பணி புரிந்தவர்களை ஆசீர்வதித்து ஜெபத்தோடு ஒரு நன்றியையும் அனுப்புவதைக் காண்கின்றோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் என்னுடைய சிநேகிதி ஓர் ஆசீர்வாத கிண்ணத்தின் மூலம் என்னுடைய வாழ்வில் ஒரு மகிழ்ச்சியைத் தந்தாள். இன்று நம்மோடு இயேசுவின் சுவிசேஷப் பணியில் உதவுபவர்களுக்கு நாம் எப்படி நன்றி தெரிவிக்கப் போகிறோம்?