ஒரு இளம் தம்பதியினரிடம் பணத்தைக் காட்டிலும் அன்பே அதிகமாயிருந்தது. கிறிஸ்துமஸ் நெருங்கியபோது இருவருமே ஒருவர் மீது ஒருவர் எத்தனை கரிசனை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டும்படியாக ஒரு பரிசுப் பொருளைக் கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருந்தனர். கடைசியாக கிறிஸ்துமஸ் மாலையில், டெல்லா தன்னுடைய முழங்கால் அளவு நீண்ட கூந்தலை விற்று, தன் கணவன் ஜிம் தன் தாத்தவும், தந்தையும் பயன்படுத்திக் கொடுத்த கைக்கடிகாரத்திற்கு பிளாட்டினத்தால் ஆன சங்கிலியை வாங்கினாள். ஜிம் தன்னுடைய கைக்கடிகாரத்தை விற்று தன் மனைவியின் கூந்தலுக்கு விலையேறப்பெற்ற சீப்புகளை வாங்கியிருந்தான்.
எழுத்தாளர் ஓ. ஹென்றி இந்த இளம் தம்பதியினரின் கதையை ‘ஞானிகளின் பரிசு’ என அழைத்தான். அவர்களுடைய பரிசு வீணாகி, கிறிஸ்துமஸ் காலைப் பொழுதில் அவர்களை முட்டாள்களாகக் காண்பித்த போதும் பரிசு கொடுத்தவர்களின் அன்பு அவர்களை ஞானிகளாக்கியது.
முதல் கிறிஸ்துமஸ் அன்று பெத்லகேமிற்கு பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருட்களோடு வந்த ஞானிகளும் சிலர் பார்வையில் முட்டாள்களாகவே காட்சியளித்தனர் (மத். 2:11) அவர்கள் யூத குலத்தவர் அல்ல. அவர்கள் வெளியிலிருந்து வந்த புறஜாதியினர். அவர்கள் தாங்கள் புதிதாகப் பிறந்துள்ள யூத ராஜாவைக் காண வந்துள்ளோம் எனக் கூறியது எருசலேமின் சமாதானத்தை எவ்வளவாய் பாதிக்கும் என்பதை அறியாதிருந்தார்கள் (வச. 2).
ஜிம், டெல்லாவின் அனுபவத்தைப் போலவே ஞானிகளின் பரிசுத் திட்டம் அவர்கள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. ஆனால், அவர்கள் பணத்தால் வாங்க முடியாத ஒன்றைக் கொடுத்தனர். ஞானிகள் பரிசுப் பொருட்களோடு வந்தனர். ஆனால், அவர்களுக்கும் நமக்கும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த அன்பின் தியாகத்தைப் பணிந்து வணங்கினர்.
தேவனுடைய பரிசாகிய கிருபை விலையேறப்பெற்றது.