2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், 5000 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு இரு தடகள வீராங்கனைகள், உலகளவில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தனர். நியூஸிலாந்தைச் சேர்ந்த நிக்கி ஹம்பிளினும், அமெரிக்கரான அபி டி அகஸ்டினோவும் ஒருவரோடொருவர் மோதி கீழே விழுந்தனர். அபி வேகமாக எழுந்து நின்று நிக்கிக்கு உதவினாள். சில நொடிகளில் இரு தடகள விராங்கனைகளும் ஓட ஆரம்பித்தனர். அபியினுடைய வலது காலில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக அவளுடைய ஓட்டம் தடுமாற ஆரம்பித்தது. அப்பொழுது நிக்கி தன் சக வீராங்கனையை ஓட்டத்தை முடிக்குமாறு ஊக்குவிக்கின்றாள். அபி முடிவு கோட்டின் அருகே தடுமாறி தாண்டிய போது நிக்கி காத்திருந்து அவளை அனைத்துக் கொண்டாள். ஒருவரையொருவர் ஊக்குவித்த அந்தக் காட்சி எத்தனை அழகாயிருந்தது.
இந்த நிகழ்வு வேதத்திலுள்ள ஒரு பகுதியை எனக்கு நினைப்பூட்டுகிறது. “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்… ஒருவன் விழுந்தாலும் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். ஓண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” (பிர. 4:9-10). ஆவிக்குரிய ஓட்டத்திலிருக்கும் நமக்கும் மற்றவரின் துணை வேண்டும். நாம் ஒருவரோடொருவர் பந்தயத்திற்காக ஓடவில்லை. மாறாக ஒரே குழுவின் உறுப்பினர்களாக ஓடுகிறோம். நாம் தடுமாறும் வேளைகளில் நம்மைத் தூக்கிவிட நமக்கு பிறரின் உதவி தேவை சில வேளைகளில் நாம் பிறரை ஊக்கப்படுத்துவதற்கு நம்முடைய ஜெபமும் பிரசன்னமும் தேவைப்படுகிறது.
இந்த ஆவிக்குரிய ஓட்டம் ஒரு தனிமையான ஓட்டமல்ல. ஒருவேலை தேவன் உன்னை நிக்கியைப் போலோ அல்லது அபியைப் போலவோ பிறர் வாழ்வில் செயல்பட்ட உன்னை வழிநடத்துகின்றாரா? அவருடைய வழி நடத்தலுக்கு இன்றே செவி சாய்த்து, நம்முடைய ஓட்டத்தை முடிப்போம்.
தேவன் நம்மை எங்கு போகும்படி விரும்புகிறாரோ,
அங்கு செல்ல நாம் ஒருவருக்கு ஒருவர் துணையாயிருப்போம்.