எனது தாயார் ஒரு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவருக்கு பராமரிப்பு அளிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. மிகவும் கடினமான நாட்களில்கூட எனது தாயார் படுக்கையிலிருந்து இறங்கி நடக்குமுன் வேதாகமத்தை வாசித்து, பிறருக்காக ஜெபித்தார்கள் அவரது நற்செயல்களும் பிறரை உற்சாகப்படுத்தி அவர்களுக்காக ஜெபிப்பதும் இடைவிடாமல் நடந்து கொண்டேயிருந்தது. பரலோக வீட்டிற்கு தேவன் அவர்களை அழைத்துக் கொண்ட நாள் வரைக்கும் தன்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் தேவனுடைய அன்பை அவர் பகிர்ந்துகொண்டார்.
தேவனோடு 40 நாட்கள் இரவும் பகலும் இருந்தபின் மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கினான் (யாத். 34:28). ஆண்டவருடன் கொண்ட மிக நெருக்கமான உறவு அவனது தோற்றத்தை மிகவும் மாற்றியதை அவன் உணரவில்லை (வச. 29). ஆனால் மோசே ஆண்டவருடன் பேசியதை இஸ்ரவேலர்கள் கண்டு கொண்டனர் (வச. 30-32). தொடர்ந்து ஆண்டவரைச் சந்தித்த மோசே தன்னைச் சுற்றி வாழ்ந்த மக்களை வழிநடத்த முடிந்தது (வச. 33-35).
தேவனோடு நாம் கொள்ளும் உறவு காலப்போக்கில் நம்மை எப்படி மாற்றுகிறதென்பதை நாம் அறியாமலிருக்கலாம். மோசேயின் முகப் பிரகாசத்தைப்போல நமது தோற்றம் வெளிப்படையாய் மாறாமலிருக்கலாம். ஆகிலும், தேவனுடன் நாம் நேரம் செலவிட்டு ஒவ்வொரு நாளும் அதிகமதிகமாய் நமது வாழ்வை அவரிடம் அர்ப்பணிக்கும்போது தேவ அன்பை நாம் பிரதிபலிக்கக் கூடும். அவரது பிரசன்னம் நம்மிலும் நம் மூலமாகவும் வெளிப்படும்போது மற்றவர்களை நம்மண்டை அவர் நெருக்கமாக அழைத்துக் கொள்வார்.
தேவனோடு நெருக்கமாக நாம் இருக்கும் தருணங்கள் நம்மை மாற்றி, அவரது அன்பை நோக்கி மற்றவர்களும் வந்து சேர உதவிடும்.