மேகங்களை எண்ணிப்பார்
பல வருடங்களுக்கு முன்பு, நானும் என் மகன்களும், எங்கள் மாடியில் படுத்துக்கொண்டு, மேகங்கள் மிதந்து செல்வதை கவனித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது மகன் ஒருவன், “ஏன் மேகங்கள் மிதக்கின்றன”, எனக் கேட்டான். உடனே நான், என் பரந்து விரிந்த ஞானத்திலிருந்து அவன் பயன்பெறும்படி அவனுக்கு பதில் கூற எண்ணி, “அதாவது”, என ஆரம்பித்து, விடை தெரியாததால் மௌனமானேன். பின்பு, “எனக்கு விடை தெரியவில்லை, ஆனால் அதை அறிந்துகொண்டு உனக்கு சொல்கிறேன்”, என மகனிடம் கூறினேன்.
ஏன் மேகங்கள் மிதக்கின்ற என்பதற்கு பதிலை பின்பு அறிந்துகொண்டேன். காற்றுமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் உறைந்துபோய், புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி வரும்பொழுது, அது பூமியின் வெப்பமான தட்பவெப்பநிலையை எதிர்கொண்டு நீராவியாகி, மறுபடியும் காற்றுமண்டலத்திற்குள் கடந்து செல்கிறது. இந்நிகழ்வைக் குறித்த மிகச் சாதாரணமான விளக்கம் இதுவே.
ஆனால் இயற்கையான விளக்கங்கள் ஒருபோதும் இறுதியான பதில்கள் ஆகாது. “மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,”
(யோபு 37:16) நாம் அறிந்துக்கொள்ளும் விதமாக தேவன் தம்முடைய அநாதி ஞானத்தினாலே இயற்கை விதிகளை ஏற்படுத்தியுள்ளார். மேகங்கள் மிதப்பதும் அப்படியே. தேவனுடைய நன்மையையும் கிருபையையும் அவருடைய சிருஷ்டிப்பில் நாம் காணும்படியாக, வெளியரங்கமாகவே வைக்கப்பட்ட அடையாளமாக மேகங்களைக் காணலாம்.
ஆகவே, நீங்கள் மேகங்களைப் பார்த்து ரசிக்கும்பொழுதும், அதில் என்ன உருவம் தெரிகிறது என கற்பனை செய்து பார்க்கும்பொழுதும், எல்லாவற்றையும் நேரத்தியாய் அழகாய் படைத்த தேவன்தாமே, அம்மேகக் கூட்டங்களை காற்றில் மிதக்கச்செய்கிறார் என்பதை நினைவுகூர்ந்திடுங்கள். நாம் அவற்றைக் கண்டு வியந்து, தேவனை அன்புள்ள இருதயத்தோடு பணிந்து தொழவேண்டும் என அவர் விரும்புகிறார். குமுலஸ் (Cumulus) என அழைக்கப்படும் திரளான சின்னஞ்சிறு மேகக்குவியல், ஸ்ட்ராடஸ் (Stratus) என்று அழைக்கப்படும் போர்வை போர்த்தியது போன்று சற்று கருத்த மேகக்கூட்டம் மற்றும் மெலிந்த நாணல் வடிவில் மங்கலாக உள்ள ஸிர்ரஸ் (Cirrus) என்று அழைக்கப்படும் மேகக்கூட்டம் உட்பட வானங்கள் அனைத்தும் தேவனுடைய மகிமையை விவரிக்கிறது.
எதுவும் பயனற்றதல்ல!
சரிரத்தில் மிகுந்த வலிவேதனைகளோடு, இயல்பாக இயங்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறேன். குறைந்துபோன செயல்பாட்டினால் மனமுடைந்து மிகவும் சோர்ந்துபோன வேளையில், “என் சரீரம் செயலற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இப்பொழுது தேவனுக்கும் மற்றவர்களுக்கும் என்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தோன்றுகிறது”, என என் தோழியிடம் மனந்திறந்து கூறினேன்.
அப்பொழுது அவள் தன் கரத்தை என் கரம் மீது வைத்து, “நான் புன்னகையோடு உனக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுதும், உன் பேச்சை நான் கவனித்து கேட்கும் பொழுதும், உனக்குள் எவ்வித தாக்கத்தையும் நான் ஏற்படுத்துவதில்லை எனக் கூறுவாயா?”, எனக் கேட்டாள்.
அதைக் கேட்டு நான் சற்று தடுமாறி, என் சாய்வு நாற்காலியில் நன்கு சாய்ந்து, “கண்டிப்பாக இல்லை”, என பதிலளித்தேன்.
அதற்கு என் தோழி, “இதைத்தானே நீ எனக்கும் மற்றவர்களுக்கும் செய்கிறாய். அப்படியிருக்க ஏன் உனக்கு தானே பொய்களைக் கூறிக்கொள்கிறாய்”, என பாசத்தோடு முறைத்தாள்.
தேவனுக்கென்று நாம் செய்வது எதுவும் பயனற்றது கிடையாது என்பதை தேவன் எனக்கு நினைவூட்டியதற்காக அவளுக்கு நன்றி செலுத்தினேன்.
நம்முடைய சரீரங்கள் இப்பொழுது பலவீனமுள்ளதாயிருந்தாலும், “பலமுள்ளதாய் எழுந்திருக்கும்,” என பவுல் உறுதியளிக்கிறார் (1 கொரி. 15:43). மேலும், கிறிஸ்தவுக்குள் மரித்தோர் மீண்டுமாய் உயிர்த்தெழுவார்கள் என தேவன் வாக்குபண்ணியுள்ளதால், அவர் நம்முடைய ஒவ்வொரு
காணிக்கையையும், எல்லா பிரயாசங்களையும் அவருடைய ராஜ்ஜியத்தைக் கட்ட பயன்படுத்துவார் (58).
பலவிதமான நபர்களைக் கொண்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே நாம் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதினால், நாம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், நம் சரீர இயக்கம் குறைந்துபோயிருந்தாலும், சோதனை வேளையிலும் நாம் வெளிப்படுத்தும் விசுவாசம், ஒரு புன்னகை, உற்சாகமூட்டும் வார்த்தை அல்லது ஒரு ஜெபம் யாவும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும், நாம் செய்யும் எவ்வித பணியும் சாதாரணமானதுமன்று, பயனற்றதுமன்று.
இருதயத்தின் நிலைகள்
எங்கள் ஆலய ஆராதனைக்குழுவில் மௌத் ஆர்கன் (Mouth Organ) வாசிக்கும் என் கணவர், சில சமயம் இசை வாசிக்கும்பொழுது, கண்களை மூடிக்கொண்டு வாசிப்பதை நான் கவனித்துள்ளேன். அப்படி கண்களை மூடிக்கொள்ளும் பொழுது, கவனத்தை சிதறவிடாமல், தன்னுடைய மௌத் ஆர்கனில் மாத்திரம் கவனத்தை செலுத்தி, சிறப்பான இசை அமைப்பதின் மூலம் தேவனை முழு மனதோடு துதிக்க முடிவதாக என் கணவர் கூறுவார்.
நாம் ஜெபிக்கும் பொழுது, நம்முடைய கண்கள் கட்டாயம் மூடியிருக்க வேண்டுமோ என சிலர் எண்ணக்கூடும். நாம் எவ்விடத்திலும் எவ்வேளையிலும் ஜெபிக்கலாம். அப்படியிருக்கையில், எப்பொழுதும் நாம் கண்களை மூடிக்கொண்டு ஜெபிப்பது, சாத்தியமற்றது. ஏனென்றால், நாம் கட்டாயம் கண்களை மூடிக்கொண்டுதான் ஜெபிக்க வேண்டுமெனில் நாம் நடக்கும் பொழுது அல்லது செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பொழுது அல்லது வண்டி ஓட்டும் பொழுது நம்மால் ஜெபிக்க முடியாதே!
அதைப்போலவே, நாம் ஜெபிக்கும்பொழுது, சரீரப்பிரகாரமாக இந்நிலையில்தான் நாம் உட்காரவோ, நிற்கவோ, முழங்காற்படியிட வேண்டும் என எவ்வித விதியுமில்லை. சாலொமோன் ராஜா தேவாலயத்தைக்கட்டி பிரதிஷ்டை செய்தபொழுது, முழங்காற்படியிட்டு “தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து,” ஜெபம் செய்தான் (2 நாளா. 6:13-14). வேதத்திலே ஜெபத்தைக் குறித்து குறிப்பிடும்பொழுது, முழங்காற்படியிட்டும் (எபே. 3:15), நின்றும் (லூக். 18:10-13), முகங்குப்புற விழுந்தும் (மத். 26:39), எந்நிலையிலும் நாம் ஜெபிக்கலாம் என்பதைக் காணலாம்.
நாம் தேவனை முழுமனதோடு நோக்க, நம் சரீர நிலைகளாகிய நிற்பது, முழங்காற்படியிடுவது, கைகளை வானத்திற்கு நேராக உயர்த்துவது, கண்களை மூடுவது போன்றவை முக்கிய மானதல்ல. நம்முடைய இருதயத்தின் நிலையே முக்கியமானது. ஏனென்றால், “அதினிடத்திலிருந்து (இருதயம்) ஜீவஊற்று புறப்படும்” (நீதி. 4:23). நம்முடைய ஜெபங்களுக்கு, “(அவருடைய) கண்கள் திறந்தவைகளும், (அவருடைய) செவிகள் கவனிக்கிறவைகளுமாய் இருப்பதினால்,” (2 நாளா. 6:4௦) நாம் ஜெபிக்கும் பொழுதெல்லாம் நம் இருதயம் நம்முடைய அன்பான தேவனை நோக்கி பக்தியோடும், நன்றியோடும், தாழ்மையோடும் தலை வணங்குவதாக.
வால்டோவை கண்டுபிடி
சிறந்த சிறுவர் புத்தகங்களில், இன்று அதிகமாக விற்பனையாகும் “வால்டோ எங்கே” (Where’s Waldo) என்னும் கார்ட்டூன் புத்தகதொகுப்பின் நட்சத்திர ஹீரோ ‘வால்டோ’. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள காட்சிகளில், மற்ற கதாப்பாத்திரங்களுக்கிடையே வால்டோ மறைந்து கொள்வான். சிறுவர்கள் அவனை கண்டுப்பிடிக்கவேண்டும். இதுவே அப்புத்தகத்தின் கரு. உலகெங்கும் உள்ள பெற்றோர்கள், தங்கள் சிறு பிள்ளைகள் வால்டோவை கண்டு பிடிக்கும் பொழுது, அவர்கள் முகங்களில் வெளிப்படுத்தும் வெற்றிக் களிப்பைக் கண்டு ரசிப்பார்கள். சில சமயம் தங்கள் பிள்ளைகள் வால்டோவை கண்டுபிடிக்க அவர்களையும் சேர்த்துக்கொள்ளும் பொழுது, அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
ஆதித் திருச்சபையில் மூப்பராக இருந்த ஸ்தேவான், கிருஸ்துவைக் குறித்து பிரசங்கித்ததற்காக கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, (அப். 7) கிறிஸ்தவர்களுக்கு எதிராக உபத்திரவம் பெருக ஆரம்பித்தது. ஆகவே அவர்கள் எருசலேமை விட்டு தப்பியோடினார்கள். அப்பொழுது இன்னொரு மூப்பராகிய பிலிப்பு, சமாரியவிற்கு தப்பிச்சென்ற கிறிஸ்தவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அவர்களுக்கு கிறிஸ்துவைக் குறித்து இன்னும் அதிகமாய் பிரசங்கித்தான். அதை அவர்கள் எற்றுக்கொண்டார்கள் (8:6). அவ்வேளை, பரிசுத்த ஆவியானவர், ஒரு “விசேஷ” பணி நிமித்தமாக “வனாந்திர பாதையிலே” பிலிப்பை அனுப்பினார். தன்னுடைய சுவிசேஷப் பணியின் மூலம், மிகுந்த பலனை சமாரியாவிலே காணும்பொழுது, ஆவியானவரின் வழிநடத்துதல் பிலிப்பிற்கு விசித்திரமாக தோன்றியிருக்கக்கூடும். ஆனால், வழியிலே ஒரு எத்தியோப்பிய நாட்டு மந்திரிக்கு, ஏசாயா புத்தகத்திலிருந்து, கிறிஸ்துவை அவன் கண்டுகொள்ள உதவி செய்தபொழுது, பிலிப்பிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! (வச. 26-40).
இதைப்போலவே, வேதத்தின் மூலம் பிறர் “இயேசுவை கண்டுக்கொள்ள” நாம் உதவும்படியான அநேக சந்தர்ப்பங்கள் நமக்கு கொடுக்கப்படுகின்றன. தன் பிள்ளை, வால்டோவை கண்டுப் பிடித்த போது, அவன் கண்களில் வெளிப்பட்ட சந்தோஷத்தைக் கண்டு மகிழும் பெற்றோரைப் போலவும், ஒரு எத்தியோப்பிய தலைவன் இயேசுவை கண்டடைந்த பொழுது பிலிப்புக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சியை போலவும், நாமும் நம்மை சுற்றியுள்ளவர்கள் இயேசுவை கண்டுகொள்ளும்போது மிகுந்த சந்தோஷமடைவோம். ஒவ்வொரு நாளும் ஆவியானவரின் வழிநடத்துதலோடு, நமக்கு மிகவும் பரிச்சயமானவர்களானாலும் சரி, அல்லது ஒரே முறை சந்தித்தவர்களானாலும் சரி, கிறிஸ்துவைக் குறித்து அவர்களிடம் பகிர நாம் ஆயத்தப்படு வோமாக.