நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்த வண்டிகள், கடகடவென்ற சத்தத்தோடு, அக்கிராமத்தின் பழைய குடிசைகளை கடந்து சென்றபோது, அங்கிருந்த கோழிகளெல்லாம் பயந்து சிதறியோடின. காலணிகள் ஏதுமின்றி வெளியே இருந்த பிள்ளைகள் வண்டிகள் செல்வதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தனர். மழையினால் சேதமடைந்த “இச்சாலையில்” வண்டிகள் செல்வது மிக அரிது.
திடீரென இவ்வண்டிகளுக்கு முன்பாக ஓரு பிரமாண்ட மாளிகை தென்பட்டது. அது அவ்வூர் மேயரின் வீடு. ஆனால் அவர் இப்பொழுது அங்கு குடியிருக்கவில்லை. தன் ஜனங்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்துக்கொண்டிருக்கையில், அம்மேயர் வேறு ஊரில் ஆடம்பரமான சுகஜீவியத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.
இதுபோன்ற அநியாயங்கள் நம்மை கோபமடைய செய்கிறது. தேவனுடைய தீர்க்கத்தரிசிகளும் இவ்வாறு கோபம்கொண்டார்கள். ஆபகூக், மிகுந்த அநீதியையும் அட்டூழியத்தையும் கண்டபோது, “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!” என தேவனை நோக்கி முறையிட்டான் (ஆப:1:2). ஆனால், கர்த்தரோ இதை ஏற்கனவே அறிந்திருந்தபடியினால், “தன்னுடையதல்லாததை தனக்காக சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ… தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தை தேடுகிறவனுக்கு ஐயோ!” எனக் கூறினார் (2:6,9). நியாயத்தீர்ப்பு வந்துகொண்டிருந்தது!
தேவனுடைய நியாயத்தீர்ப்பு பிறர் மேல் வருவதை நாம் வரவேற்கிறோம். ஆனால் ஆபகூக் புத்தகத்தில் உள்ள ஒரு முக்கிய செய்தி நம்மை நிதானிக்க செய்யும். “கர்த்தரோவென்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மவுனமாயிருக் கக்கடவது,” (2:2௦) என்னும் வசனத்தில் “பூமி எல்லாம்” எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒடுக்குகிறவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும். சில சமயம், மௌனமாய் இருக்கிற தேவனுக்கு முன்பாக நாமும் மௌனமாய் இருப்பதே ஏற்றதாயிருக்கும்!
ஏன் மௌனம்? ஏனென்றால் நாம் மிக எளிதாக நம்முடைய ஆவிக்குரிய வறுமையை காணத் தவறிவிடுகிறோம். ஆனால், தேவனுடைய பரிசுத்த சமூகத்தில் நாம் மௌனமாய் காத்திருக்கும் போது நம்முடைய பாவ சுபாவத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம்.
தேவன் மீது நம்பிக்கை வைக்க ஆபகூக் கற்றுகொண்டது போல, நாமும் கற்றுக்கொள்வோமாக. அவருடைய வழிகளையெல்லாம் நாம் அறியாதிருப்பினும், அவர் நல்லவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோமே. அவருடைய அதிகாரத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டு எதுவுமில்லை.
நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான். நீதி 29:7