நாம் பாடும்பொழுது, நம் மூளையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன! நாம் பாடும்பொழுது, மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நீக்கக்கூடிய ஹார்மோன்கள் நம் உடலில் சுரப்பதாக சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், மக்கள் ஒன்றுகூடி இசைந்து பாடும்பொழுது, அவர்களுடைய இதயத்துடிப்பும் ஒத்திசைப்பதாக வேறுசில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சபையானது, ஒருவரோடொருவர் சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் உரையாடும்படி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார் (எபே. 5:19). மேலும் வேதத்தில், ஐம்பது முறைக்கும் மேலாக ‘பாடித் துதியுங்கள்’ என எழுதப்பட்டுள்ளது.
2 நாளாகமம் 20ஆம் அதிகாரத்தில், தேவன் மீது தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, பாடிக்கொண்டு யுத்தத்திற்கு சென்ற ஜனத்தைக் குறித்துக் காணலாம். யூதாவை நோக்கி எதிரிகள் படையெடுத்து வந்தபொழுது, ராஜாவாகிய யோசபாத் மிகவும் பயந்து, தேவனிடம் மன்றாடும்படி ஜனங்களை அழைத்தான். அப்பொழுது ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடி உபவாசித்து, தீவிரமாய் ஜெபித்தார்கள். “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்கு தெரியவில்லை, ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கின்றது,” என்றார்கள் (வச. 12). மறுநாள் அவர்கள் யுத்தத்திற்கு சென்றார்கள். ஆனால், வலிமையான போர்வீரர்களுக்கு பதில் பாடகர் குழுவினர் அவர்களை யுத்த களத்திற்கு நேராக வழிநடத்திச் சென்றார்கள். அவர்கள் யுத்தம் செய்யாமலேயே வெற்றி பெறுவார்கள் என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசித்தார்கள் (வச. 17).
அவர்கள் பாடித் துதித்து யுத்தத்ததை நோக்கி செல்கையில், அவர்களுடைய எதிரிகள் ஒருவரோடொருவர் வெட்டுண்டு மடிந்துபோனார்கள்! தேவஜனம் யுத்தக்களத்தை சென்றடையும் முன் எதிரிகளின் சண்டை முடிந்துப்போயிற்று. சம்பவிக்கப்போவது இன்னதென்பதை அறியாதிருந்தபோதிலும், தேவன்மீது விசுவாசம் வைத்து அவரைப் பாடித் துதித்து சென்ற பொழுது, தேவன் அவர்களை இரட்சித்தார்.
நன்மையான காரணங்களுக்காகவே தேவனை நாம் துதித்துப் போற்றும்படி அவர் நம்மை ஊக்குவிக்கிறார். யுத்தத்தை நோக்கி சென்றாலும் செல்லாவிட்டாலும், நம்முடைய எண்ணங்களையும் இருதயத்தையும் வாழ்வையும் மாற்றும் வல்லமை, நாம் ஏறெடுக்கும் துதிக்கு உண்டு.
தேவனோடு இசைந்திருக்கும் இருதயம் அவரை துதித்துப்பாடும்.