தேவனால் உடுத்துவிக்கப்பட்டு!
என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாய் இருந்தபொழுது, எங்களுடைய தோட்டத்தில் விளையாடும் சமயம், கொஞ்ச நேரத்திலேயே சேறும் மண்ணும் அவர்கள்மீது ஒட்டிக்கொள்ளும். ஆகவே அவர்கள் விளையாடிவிட்டு வீட்டுக்குள் வரும்பொழுது, வாசலில் வைத்து அவர்களுடைய ஆடைகளைக் கழற்றிவிட்டு ஒரு துண்டைச் சுற்றி குளியலறைக்கு அவர்களை கொண்டு சென்று விடுவேன். இல்லையென்றால் தரையெல்லாம் அழுக்காகிவிடும். சிறிது நேரத்திலேயே, தண்ணீர் மற்றும் சோப்பின் உதவியோடு அழுக்கெல்லாம் நீங்கி அவர்கள் சுத்தமாகி விடுவார்கள்.
பாவத்தையும் தப்பிதங்களையும் குறிக்கும் அழுக்கான ஆடையைப் பிரதான ஆசாரியனாகிய யோசுவா உடுத்தியிருப்பதை ஒரு தரிசனத்தில் சகரியா கண்டான் (சக. 3:3). ஆனால், தேவன் அவனை சுத்திகரித்து, அவனுடைய அழுக்கான வஸ்திரங்ககளை களைந்து சிறந்த வஸ்திரங்களினால் அவனை உடுத்துவித்தார் (3:5). தேவன் அவனுடைய பாவத்தை எல்லாம் நீக்கி விட்டார் என்பதையே அவனுடைய புதிய தலைப்பாகையும் ஆடையும் பறைசாற்றியது.
அதைப்போலவே சிலுவையின் மூலம் இயேசு நமக்களித்த இரட்சிப்பினால் நம்முடைய பாவம் கழுவப்பட்டு நாமும் விடுதலை பெறலாம். அவருடைய சிலுவை மரணத்தின் மூலம், நம்மை பற்றிக்கொண்டிருக்கும் பாவக்கறைகளெல்லாம் நீங்கி தேவனுடைய குமாரர் குமாரத்திகள் என்ற ஆடையை தரித்து கொள்கிறோம். இனி ஒருபோதும் நாம் செய்த பாவங்களினால் (பொய், திருட்டு, புறங்கூறுதல், இச்சை மற்றும் இதர பாவங்கள்) எண்ணப்படாமல், தேவன் தான் நேசிப்பவர்களுக்கு கொடுத்த நாமங்களினால் அறியப்படுவோம். அதாவது இனி நாம் மீட்கப்பட்டவர்கள், மறுரூபமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், விடுதலையானவர்கள் என அழைக்கப்படுவோம்.
நீங்கள் உங்களுக்கென்று தேவன் வைத்துள்ள ஆடையை அணிந்துகொள்ளும்படி, உங்களுடைய அழுக்கான ஆடையை களைந்து விடும்படி தேவனிடம் கேளுங்கள்.
சிங்கங்களோடு ஜீவித்தல்!
சிக்காகோவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு நான் சென்றிருந்தபொழுது, பண்டைக்கால பாபிலோன் தேசத்து சிங்கத்தின் வரைபடம் ஒன்றைக் கண்டேன். அது மூர்க்கமான முகபாவத்தையுடைய சிறகுள்ள ஒரு சிங்கத்தின் பெரிய அளவிலான சுவர் சித்திரம். அன்பையும் யுத்தத்தையும் குறிக்கும் பாபிலோனிய தேவதையாகிய இஷ்தாருக்கு அடையாளமாகிய இச்சிங்கம், கி.மு 6௦4-562 காலக்கட்டத்தில் ஒரு பாபிலோனிய பாதையில் அணி வகுத்து நின்ற 12௦ சிங்கங்களுக்கு உதாரணமாக உள்ளது.
பாபிலோனிய சாம்ராஜ்ஜியம் எருசலேமைத் தோற்கடித்தபின்பு, சிறைபிடிக்கப்பட்டு நெபுகாத்நேசாரின் ராஜ்ஜியத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எபிரேயர்கள், அச்சிங்கங்களைக் கண்டிருப்பார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். மேலும் இஸ்ரவேலின் தேவனை இஷ்தார் தேவதை தோற்கடித்துவிட்டதாக சில இஸ்ரவேலர் எண்ணியிருக்கக்கூடும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் எபிரேய கைதியான தானியேலோ மற்ற இஸ்ரவேலரை சஞ்சலப்படுத்திய சந்தேங்களுக்கு இடங்கொடுக்கவில்லை. தேவனைக் குறித்த தன்னுடைய கண்ணோட்டத்திலும் அர்ப்பணிப்பலும் அவன் உறுதியாய் இருந்தான். இஸ்ரவேலின் தேவனைச் சேவிப்பதினால் குகையிலே தன்னை போட்டுவிடுவார்கள் என அறிந்திருந்தும், ஜன்னல்களை திறந்து வைத்து, அனுதினமும் மூன்று வேளை ஜெபித்து வந்தான். பின்பு தேவன், சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலைப் பத்திரமாக மீட்டதை கண்ட ராஜாவாகிய தரியு, “தானியேலின் தேவன்.... ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருகிறவர்... அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும்” (தானி. 6:26-27) எனக் கூறினான். தானியேலுடைய உண்மையும் விசுவாசமும் பாபிலோனிய தலைவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
நாம் நெருக்கடி மத்தியில் சோர்வுற்று இருப்பினும், தேவனிடத்திலுள்ள விசுவாசத்தில் நிலைத்திருந்தால், அதைக் கண்டு மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்தும்படி நல்ல தாக்கத்தை பிறர் மனதில் நாம் ஏற்படுத்தலாம்.
உற்ற நண்பனாய் இருத்தல்
“சாலையோரத்திலே உள்ள வீடு” என்னும் கவிதைத் தொகுப்பில், “சாலையோரத்திலே நான் வாழ்ந்து மனுஷருக்கு நண்பனாய் இருக்கவேண்டும்”, என கவிஞர் சாமுவேல் ஃபாஸ் (Samuel Foss) எழுதியுள்ளார். நானும் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அதாவது மக்களின் நண்பனாக. சோர்ந்துபோன பயணிகளுக்காக சாலையோரத்திலே நான் காத்திருக்க விரும்புகிறேன். மற்றவர்களால் தீங்கு இழைக்கப்பட்டு, அடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருதயத்தில் நொறுங்குண்டு, காயப்பட்டு, பாரத்தோடு கடந்து வருபவர்களை வார்த்தையினால் உற்சாகமூட்டி பெலப்படுத்தி அனுப்ப விரும்புகிறேன். அவர்களையோ அல்லது அவர்களுடைய பிரச்சினைகளையோ முழுமையாக என்னால் சரிசெய்ய இயலாதிருப்பினும் ஆசீர்வதித்து அவர்களை வழியனுப்பலாம்.
யுத்தம் முடிந்து களைப்போடு திரும்பிக்கொண்டிருந்த ஆபிரகாமை, சாலேமின் ராஜாவும் ஆசாரியனுமாகிய மெல்கிசேதேக்கு ஆசீர்வதித்தான் (ஆதி. 14). தும்மலின் போது அனிச்சையாக கூறும் வாய்மொழியல்ல “ஆசீர்வாதம்”. ஆசீர்வாதத்தின் ஊற்றாகிய தேவனிடத்தில் பிறரை அழைத்து வருவதே உண்மையான ஆசீர்வாதம். “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக”, என்று மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்தான் (வச. 9).
நாம் பிறரோடு சேர்ந்து ஜெபிக்கும்பொழுது அவர்களை ஆசீர்வதிக்கிறோம். ஏனெனில் அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படுவதற்கான ஒத்தாசையை பெற்றுக்கொள்ள கிருபையின் சிங்காசனத்தண்டை அவர்களை நாம் அழைத்துச்செல்லலாம் (எபி. 4:16) நம்மால் அவர்களுடைய சூழ்நிலைகளை மாற்றமுடியாமல் போகலாம், ஆனால் சூழ்நிலைகளை மாற்றவல்ல தேவனை அவர்களுக்கு காண்பிக்கலாம். ஒரு உண்மையான நண்பன் செய்யும் காரியம் அதுவே.