என் தோழியின் தவறான தீர்மானங்களும் தேர்வுகளும் அவளை பாவத்திற்குள்ளாக மிக அதிகமாய் அழைத்துச் சென்றது மாத்திரமன்றி அவளுடைய செயல்கள் என்னையும் பாதித்தது. இதைக் குறித்து நான் ஒவ்வொரு வாரமும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும் பெண் ஒருவரிடம் முறையிட்டபொழுது, அவர் தன்னுடைய கரங்களை என் கரங்கள் மீது வைத்து, “சரி நாம் நம் அனைவருக்காகவுமே ஜெபிக்கலாம்” என்று கூறினார்.
அதற்கு நான், “நம் அனைவருக்காகவுமா?” என முகம் சுளித்து வினவினேன்.
“ஆம் எப்பொழுதும் இயேசுவே நம்முடைய பரிசுத்தத்தின் அளவுகோலாய் இருப்பதால், நம்முடைய பாவங்களை நாம் ஒருபோதும் மற்றவருடைய பாவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என்று நீயே கூறியிருக்கிறாயே?” என அவர் பதிலளித்தார்.
நான் தவறை உணர்ந்து, “இந்த உண்மை எனக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நீங்கள் கூறுவது சரியே. என்னுடைய நியாயந்தீர்க்கும் மனப்பான்மையும் ஆவிக்குரிய பெருமையும் அவளுடைய பாவங்களை விட சாதாரமானதும் இல்லை மோசமானதுமில்லை” எனக் கூறினேன்.
அதற்கு அவர் “மேலும், நாம் உன்னுடைய தோழியை பற்றி பேசுவதின் மூலம் புறங்கூறிக் கொண்டிருக்கிறோம். இதனால்…” என்று கூற…
“நாம் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்,” என பதிலளித்தேன். தவறை உணர்ந்து, தலையை தாழ்த்தி, “தயவு செய்து நமக்காக ஜெபம் செய்யுங்கள்,” என்றேன்.
தேவலாயத்திற்கு வந்து வெவ்வேறு விதமாக ஜெபித்த இரண்டு நபர்களைக் குறித்து உவமையாக இயேசு கூறியிருப்பதை லூக்கா 18ஆம் அதிகாரத்தில் காணலாம் (வச. 9-14). அந்த பரிசேயனைப் போல நாமும் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நாம் நம்மை பற்றியே பெருமை பாராட்டிக்கொள்ளவும் கூடும் (வச. 11-12). இந்த மனப்பான்மையினால், மற்றவர்களை நியாயந்தீர்க்க நமக்கு அதிகாரம் உண்டென்றும், அவர்களை சீர்படுத்த நமக்கு வல்லமை உண்டென்றும், அப்பொறுப்பு நம்முடையதே என்றும் நாம் எண்ணி ஜீவிப்போம்.
ஆனால், நாம் இயேசுவின் பரிசுத்த வாழ்வையே மாதிரியாகக் கொண்டு, அவருடைய நன்மைகளை நம் வாழ்வில் கண்டுணரும் பொழுது, நாமும் அந்த ஆயக்காரனைப்போல, தேவகிருபை நமக்கு இன்னும் எவ்வளவு அதிகமாய் தேவை என்பதை அறிந்துகொள்வோம் (வச. 13). தேவனுடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் நம் வாழ்வில் அனுபவிக்கும்பொழுது, நாம் மனமாற்றம் அடைந்து, இரக்கத்தை எதிர்பார்க்கவும் அதையே பிறருக்கு அளிக்கவும் வல்லமைபெறுவோம். ஒருபோதும் நாம் பிறரை குற்றவாளியாக தீர்க்கமாட்டோம்.
நமக்கு எவ்வளவு அதிகமாய் இரக்கங்கள் தேவைப்படுகிறது என்பதை நாம் உணரும் பொழுது, பிறருக்கு அதிசீக்கிரமாக நாம் இரக்கம் பாராட்டுவோம்.