அர்லிங்டன் (Arlington) தேசிய கல்லறையிலுள்ள ‘அறியாதவர்களின் கல்லறையில்’ நடந்தேறும் காவலர் மாற்றம் என்னை எப்போதும் வெகுவாய் கவர்ந்ததுண்டு. மிக மரியாதையுடன் கம்பீரமாக அதே சமயம் எளிமையாகவும் அந்நிகழ்வு நடக்கும். ‘தேவன் மாத்திரமே அறிந்த’ அப்போர்வீரர்களையும் அவர்களுடைய தியாகத்தையும் எண்ணி மிக ஜாக்கிரதையாக வடிவமைத்து இயக்கப்பட்ட இந்நிகழ்வு நெஞ்சை
நெகிழ வைக்கும் அஞ்சலி ஆகும். அது மாத்திரமல்ல மக்கள் கூட்டம் ஏதுமில்லாத போதும், முன்னும் பின்னுமாக சீரான வேகத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் மோசமான வானிலையிலும் அக்காவலர் நடந்துசெல்வது நெஞ்சை நெகிழச் செய்யும். 

2003ஆம் ஆண்டு வாஷிங்டன் மாநகரை இசபெல் (Isabel) சூறாவளி நெருங்கிக் கொண்டிருந்தபொழுது, அது அந்நகரை தாக்கக்கூடிய மிக மோசமான நேரத்தில் அக்காவலர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கிட்டத்தட்ட அக்காவலர் அனைவரும் அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. சூறாவளி வீசிய போதும் கூட மடிந்துபோன தங்களுடைய தோழர்களை கனப்படுத்தும் பொருட்டு எவ்வித சுயநலமுமின்றி அவரவர் இடத்திலேயே நின்றார்கள். 

தேவனிடத்தில் மனந்தளராத தன்னலமற்ற பக்தியுடன் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்று மத்தேயு 6ஆம் அதிகாரத்தில் உள்ள இயேசுவின் போதனை நமக்கு தெரிவிப்பதாக நான் விசுவாசிக்கிறேன் (வச. 1-6). நற்கிரியைகளுக்கும் பரிசுத்த ஜீவியத்திற்கும் நேராக வேதாகமம் நம்மை அழைக்கிறது. ஆனால் இவை ஆராதனைக்கும் கீழ்ப்படிதலுக்குமுரிய காரியங்களாக இருக்க வேண்டுமே அன்றி (வச. 4-6), நம்முடைய சுய மகிமைக்காக திட்டமிட்டு செயல்படுத்தபட்ட காரியங்களாக இருக்கக்கூடாது (வச. 2). நம்முடைய ஜீவியம் முழுவதும் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய சரீரங்களை “ஜீவ பலியாக” ஒப்புக்கொடுக்கும்படி நம்மை நோக்கி மன்றாடுகிறார் (ரோம. 12:1) 

தேவனே, எங்களுடைய தனிமையான தருணங்களும் தனிமையற்ற தருணங்களும் நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பையும், பக்தியையும் பறைசாற்றுவதாக.