தன் வாழ்நாள் முழுவதும் கம்பீரமாகவும் கண்ணியமாகவும் இருந்த என் தாயார், இப்பொழுது முதிர்வயதினால் சிறைப்பட்டு தளர்ந்து பலவீனமடைந்து ஒரு நலவாழ்வு மையத்தின் படுக்கையிலே படுத்திருந்தார். மூச்சுவிடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருந்த பொழுது, அதற்கு நேர் எதிர்மாறாக அவ்வறையின் ஜன்னலுக்கு வெளியே அழகான வசந்தகால நாள் நம்மை இனிதாய் வரவேற்றது.
உணர்ச்சிமிக்க வழியனுப்புதலின் அப்பட்டமான உண்மை நிலைக்கு ஏற்றாற் போல நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இவ்வுலகத்தில் உள்ள எப்பேர்பட்ட ஆயத்தமும் நம்மை தயார் படுத்த இயலாது. இதை சிந்தித்தபொழுது சாவு என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று! என நான் எண்ணினேன்.
அப்பொழுது நான் என் பார்வையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த விதை தட்டில் உள்ள விதையை உண்ணும்படி சிறகடித்தவாறு ஒரு சிறு பறவை அதை உண்டுகொண்டிருந்ததை கண்டேன். அக்காட்சியை கண்ட உடனே “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”, என்று நான் நன்கு அறிந்த இவ்வசனம் என் மனதிலே தோன்றியது (மத். 10:29). இவ்வார்த்தைகளை இயேசு தம்முடைய சீஷர்கள் யூதேயாவுக்கு சென்று ஊழியம் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தபொழுது கூறினார். மேலும், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”, என்றும் அவர்களிடம் கூறினார் (வச. 31). இந்நியமனம் அவர்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் பொருந்தும்.
என் தாய் சற்று அசைந்து தன் கண்களைத் திறந்து பார்த்தார். அப்பொழுது அவர் தன் பால்ய வயதில் மிகுந்த அன்போடு அவரது தாயை கூப்பிடும் ஒரு டச்சு மொழிச் சொற்றொடரை கூறி, “மூயுட்டி இறந்துவிட்டார்!” என தன் தாயை குறித்து தெரிவித்தார்.
“உண்மைதான். அவர் இப்பொழுது இயேசுவுடன் இருக்கிறார்,” என்று என் மனைவி பதிலளித்தாள். அதைக் கேட்ட என் தாயார் நிச்சயமின்றி, “ஜாய்ஸ் மற்றும் ஜிம்?” என்று தன்னுடைய சகோதரியை குறித்தும் சகோதரனை குறித்தும் கேட்டார். அதற்கு என்னுடைய மனைவி, “ஆம், அவர்களும் இயேசுவோடுதான் இருக்கிறார்கள். நாமும் சீக்கிரத்தில் அவர்களோடு இருப்போம்!” என்று பதிலளித்தார்.
“ஆனால், காத்திருப்பது மிகக் கடினமாக உள்ளது,” என அமைதியாக என் தாயார் கூறினார்.
பரலோக விடியலுக்கு முந்தைய கடைசி நிழல் மரணமாகும்.