நமக்கு எவ்விதத்திலும் இரத்த சம்பந்தமில்லாத ஆனால் அதேசமயம் உருவத்தில் நம்மைப்போலவே இன்னொரு நபர் இவ்வுலகத்தில் உண்டு என்று கூறுவார்கள். அதாவது ஒத்த உருவமுள்ளவர்கள்.
அப்படி என்னைப்போல இருப்பவர் இசைத்துறையிலுள்ள ஒரு பிரபலமான நட்சத்திரம். நான் ஒருமுறை அவருடைய இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபொழுது, இடைவேளை சமயத்தில், உடனிருந்த ரசிகர் கூட்டத்தில் அநேகர் என்னை ஒன்றிற்கு இரண்டு முறை திரும்பிப் பார்த்தனர். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், உருவத்தில் மாத்திரமே நான் ஜேம்ஸ் டெய்லர் (James Taylor) போல் இருந்தேனே தவிர அவரைப்போல பாடவோ, கிட்டார் வாசிக்கவோ தெரியாது.
நீங்கள் யாரைப்போல உள்ளீர்கள்? இக்கேள்வியைச் குறித்து நீங்கள் சிந்திக்கும் அதே வேளை, “(கர்த்தருடைய) சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்,”(2 கொரி. 3:18) என்று பவுல் கூறியதை ஆழ்ந்து சிந்திப்பீர்களாக. நம்முடைய வாழ்வின் மூலம் நாம் இயேசுவைக் கனப்படுத்த விரும்பினால், அவருடைய சாயலை நாம் தரித்துக் கொள்வதே நம்முடைய ஓர் இலக்காக இருக்க வேண்டும். அதாவது பரிசுத்த ஆவியானவரின் உதவியைப் பெற்று கிறிஸ்துவின் பண்புகளை நம்முடைய வாழ்வில் வெளிப்படுத்த வேண்டுமே அன்றி அவரைப் போலவே தாடி வளர்த்துக் கொண்டும் செருப்பு அணிந்து கொண்டும் வாழ்வது கிறிஸ்துவின் சாயலை தரிப்பது ஆகாது. உதாரணத்திற்கு இயேசுவைப் போல நாம் நம்முடைய மனப்பான்மையில் தாழ்மை யோடும், குணத்தில் அன்பாகவும், ஒடுக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களிடத்தில் இரக்கத்தோடும் காணப்படும்படி அவரையே பின்பற்றி பிரதிபலிக்க வேண்டும்.
நாம் இயேசுவின் மீது நம்முடைய கண்களை பதிய வைத்து “தேவ மகிமையை ஆழ்ந்து சிந்திப்போமானால்”, நாமும் அவரைப் போலவே மகிமையின் மேல் மகிமை அடைந்து காணப்படுவோம். மனுஷர் நம்மைக் கண்டு கவனித்து, “நான் இயேசுவை உன்னிலே காண்கிறேன்!” என்று கூறினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!
‘அன்பே’ கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்குள் உள்ள சாயலின் ஒற்றுமை என்பதையே இவ்வுலகம் காண வேண்டும்.