சிக்காகோவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு நான் சென்றிருந்தபொழுது, பண்டைக்கால பாபிலோன் தேசத்து சிங்கத்தின் வரைபடம் ஒன்றைக் கண்டேன். அது மூர்க்கமான முகபாவத்தையுடைய சிறகுள்ள ஒரு சிங்கத்தின் பெரிய அளவிலான சுவர் சித்திரம். அன்பையும் யுத்தத்தையும் குறிக்கும் பாபிலோனிய தேவதையாகிய இஷ்தாருக்கு அடையாளமாகிய இச்சிங்கம், கி.மு 6௦4-562 காலக்கட்டத்தில் ஒரு பாபிலோனிய பாதையில் அணி வகுத்து நின்ற 12௦ சிங்கங்களுக்கு உதாரணமாக உள்ளது.
பாபிலோனிய சாம்ராஜ்ஜியம் எருசலேமைத் தோற்கடித்தபின்பு, சிறைபிடிக்கப்பட்டு நெபுகாத்நேசாரின் ராஜ்ஜியத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எபிரேயர்கள், அச்சிங்கங்களைக் கண்டிருப்பார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். மேலும் இஸ்ரவேலின் தேவனை இஷ்தார் தேவதை தோற்கடித்துவிட்டதாக சில இஸ்ரவேலர் எண்ணியிருக்கக்கூடும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் எபிரேய கைதியான தானியேலோ மற்ற இஸ்ரவேலரை சஞ்சலப்படுத்திய சந்தேங்களுக்கு இடங்கொடுக்கவில்லை. தேவனைக் குறித்த தன்னுடைய கண்ணோட்டத்திலும் அர்ப்பணிப்பிலும் அவன் உறுதியாய் இருந்தான். இஸ்ரவேலின் தேவனைச் சேவிப்பதினால் குகையிலே தன்னை போட்டுவிடுவார்கள் என அறிந்திருந்தும், ஜன்னல்களை திறந்து வைத்து, அனுதினமும் மூன்று வேளை ஜெபித்து வந்தான். பின்பு தேவன், சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலைப் பத்திரமாக மீட்டதை கண்ட ராஜாவாகிய தரியு, “தானியேலின் தேவன்…. ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருகிறவர்… அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும்” (தானி. 6:26-27) எனக் கூறினான். தானியேலுடைய உண்மையும் விசுவாசமும் பாபிலோனிய தலைவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
நாம் நெருக்கடி மத்தியில் சோர்வுற்று இருப்பினும், தேவனிடத்திலுள்ள விசுவாசத்தில் நிலைத்திருந்தால், அதைக் கண்டு மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்தும்படி நல்ல தாக்கத்தை பிறர் மனதில் நாம் ஏற்படுத்தலாம்.
தேவனிடத்தில் நாம் வைக்கும் நம்பிக்கையும் விசுவாசமும் மற்றவர்களுக்கு நல்ல உந்துதலாய் இருக்கும்.