தன் பிள்ளைகளிடத்தில் ஐந்து-நிமிட விதியை உபயோகித்து வந்த ஓர் தாயைப் பற்றி நான் புத்தகத்தில் படித்தேன். தன் பிள்ளைகள் தினமும் பள்ளிக்குச் செல்ல தயாரானவுடன் செல்வதற்கு முன், அனைவரும் ஐந்து நிமிடங்கள் ஒன்று கூட வேண்டும் என்பதே அந்த விதி.
அவர்கள் தங்கள் தாயைச் சுற்றி நின்றுகொள்வர். அப்போது அவர் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி, தேவனுடைய ஆசீர்வாதம் அவர்கள் மேல் அன்று நிலைத்து இருக்கும்படியாக ஜெபிப்பார். பின்னர், முத்தமிட்டு, அவர்களை வழியனுப்பி வைப்பார். சுற்றுப்புறத்திலிருக்கும் பிள்ளைகள் அந்நேரம் அங்கு வந்தால் அவர்களும் ஜெபத்திலே கலந்து கொள்வார்கள். அப்பிள்ளைகளில் ஒருவர், அந்த அனுபவம் ஜெபத்தின் முக்கியத்துவத்தை தனக்கு கற்றுத் தந்ததாக பல வருடங்களுக்குப் பின்னர் பகிர்ந்துகொண்டார்.
102ஆம் சங்கீதத்தை எழுதியவருக்கு ஜெபத்தின் முக்கியத்துவம் நன்கு தெரிந்திருந்தது. “பலவீனம் அடைந்து பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் ஒரு நபர், தேவனிடம் தன் புலம்பல்களை கொட்டும் சங்கீதம்” என்று அதன் தலைப்பு இருகின்றது. “கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்.. நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்” (வச. 1-2) என்று அவர் அழுகின்ற பொழுது, தேவன் “தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்நோக்கமாக” இருக்கிறார் (வச.19).
தேவன் உங்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார், உங்களுடைய குரலைக் கேட்க விரும்புகிறார். நீங்கள் ஐந்து-நிமிட விதியைப் பின்பற்றி ஆசீர்வாதங்களை பெற விரும்பினாலும் சரி அல்லது கொடுந்துயரத்தினால் பல மணிநேரம் தேவனுடைய பாதத்தில் அழுது புலம்பினாலும் சரி, எப்படியோ ஒவ்வொரு நாளும் தேவனிடம் பேசுங்கள். உங்களது செயல், உங்கள் குடும்பத்தினர் மீது அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்.
ஜெபம் செய்வதின் மூலம் நமக்கு தேவன் தேவை என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.