இரக்கமுள்ள ஒரு இருதயம்
ஒரு கூட்டமான கேளிக்கைப் பூங்காவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாங்கள் ஏழு பேர் சென்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒரே வரிசையில் ஒன்றாக அமர ஆசைப்பட்டு ஒரு வரிசையில் நுழைந்த பொழுது, ஒரு பெண் எங்களுக்கிடையே புகுந்து அவ்வரிசையில் அமரச் சென்றாள். அப்பொழுது என் மனைவி நாங்கள் ஒரே வரிசையில் அமர விரும்புவதை தெரிவித்த பொழுது “அதெல்லாம் சரிப்படாது,” என பட்டென்று கூறிவிட்டு தன்னுடன் வந்திருந்த இரண்டு நபர்களுடன் அவ்வரிசைக்குள் விரைந்து நுழைந்தனர்.
ஆகவே, எங்களில் நான்கு பேர் முன் வரிசையிலும் மூன்று பேர் பின் வரிசையிலும் அமர்ந்தபொழுது, அப்பெண்ணோடு வந்திருந்த ஒருவர் உடல் ஊனமுற்றவர் என்பதை என் மனைவி கவனித்தாள். அப்பெண் தன் நண்பருக்கு வேண்டிய உதவியை செய்வதற்காகவே அவர்கள் ஒன்றாக அமரமுயன்றிருக்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்தபொழுது எங்கள் எரிச்சல் மறைந்து போயிற்று. “யோசித்துப் பார்த்தால், இப்படிப்பட்டதான நெரிசலான இடத்தை சமாளிப்பது அவர்களுக்கு எவ்வளவு கடினம்,” என என் மனைவி கூறினாள். அப்பெண்மணி எங்களிடம் கடுமையாகத் தான் பேசினாள், ஆனாலும் கோபத்தைக் காட்டுவதற்கு பதிலாக நாம் இரக்கத்தை காட்டலாமே.
எங்கு சென்றாலும், இரக்கத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை நாம் காண நேரிடும். அப்பொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளின்படி “நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயையையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு” (கொலே. 3:12), நம்மைச் சுற்றி கிருபையின் அன்பான தொடுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவிடுங்கள். மேலும் அவர் “ஒருவரையொருவர் தாங்கி.., ஒருவருக் கொருவர் மன்னியுங்கள்” என்றும் பரிந்துரைக்கின்றார் (வச. 13).
நாம் பிறர் மீது இரக்கத்தை வெளிக்காட்டும் பொழுது, கிருபையும் இரக்கமும் நிறைந்த இருதயத்தை நம்மீது ஊற்றிய தேவனை அவர்கள் காண உதவிடுவோம்.
திரைக்குப் பின்னால்!
என் மகள் தன்னுடைய கேள்விக்கு விரிவானதொரு பதிலை எதிர்பார்த்து அவளுடைய தோழிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள். அதை அவள் தோழி வாசித்துவிட்டாள் என்பதை குறுஞ்செய்தி சேவை மூலம் அறிந்துகொண்டு எதிர்பார்ப்போடு பதிலுக்காக காத்திருந்தாள். சில நிமிடம்தான் கடந்திருக்கும், ஆனால் அதற்குள் பொறுமையிழந்து அத்தாமதத்தை எண்ணி எரிச்சலோடு புலம்ப ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்தில் எரிச்சல் கவலையாக மாறியது. இன்னும் பதில் வராததால் ஒருவேளை தங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என எண்ண ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வழியாக பதில் வந்ததும், அவர்களுடைய நட்பில் எப்பிரச்சனையும் இல்லை என்பதை உணர்ந்து என் மகள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அவ்வளவு நேரம் அவளுடைய தோழி அக்கேள்விக்கு வேண்டிய பதிலை அனுப்புவதில்தான் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான தானியேலும் கூட ஓர் பதிலை எதிர்பார்த்து கவலையோடு காத்திருந்தான். ஒரு மகா பெரிய யுத்தத்தை குறித்து பயங்கரமான தரிசனத்தை கண்டதும் தேவனைத் தாழ்மையோடு நோக்கி, உபவாசித்து ஜெபத்தில் தரித்திருந்தான் (வச. 10:3,12). மூன்று வாரங்களாக ஒரு பதிலையும் அவன் பெறவில்லை (வச. 2,13). இறுதியாக ஒரு தேவதூதன் வந்து, “முதல் நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது,” என தானியேலுடைய ஜெபத்தை குறித்து உறுதியளித்தான் (வச. 12). அதாவது 21 நாட்களும் தானியேலுடைய ஜெபத்தின் சார்பில் அத்தேவதூதன் போராடிக்கொண்டிருந்தான். இதைக் குறித்து ஒன்றையும் தானியேல் அறியாதிருந்தபோதிலும், முதல் நாள் தான் ஏறெடுத்த ஜெபம் துவங்கி தேவதூதன் பதில் கொண்டு வந்த 21வது நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் தேவன் கிரியை செய்து கொண்டுதான் இருந்தார்.
தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்கிற நிச்சயம், நாம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது, பதில் வரவில்லை என்றால் மிகுந்த கவலைக்குள்ளாவோம். ஆனால் நாம் அறியாதபொழுதும் தேவன் தாம் அன்புகூருகிறவர்களுக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை தானியேலின் அனுபவம் நமக்கு நினைவூட்டுகிறது.
ஆம் என்பது இல்லை என்றாகும்பொழுது
புற்றுநோயால் போராடிக் கொண்டிருந்த என் தாய்க்கு உடனிருந்து பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி தேவனுக்கு நான் நன்றி செலுத்தினேன். மருந்து மாத்திரைகள், உதவி செய்வதற்குப் பதிலாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதால் என் தாயார் அச்சிகிச்சையை கைவிட முடிவு செய்தார். “பரலோக வீட்டிற்கு செல்ல நான் தயாராகி விட்டேன் என்பதை தேவன் அறிவார். ஆகவே என்னுடைய கடைசி நாட்களை குடும்பத்தினரோடு சந்தோஷமாக கழிக்கவே விரும்புகிறேன்;` வேதனையோடு இருக்க விரும்ப வில்லை” என்று அவர் கூறினார்.
பரம வைத்தியராகிய நம்முடைய பரமபிதாவிடம் நம்பிக்கையோடு ஓர் அற்புதத்தை எதிர் பார்த்து மன்றாடினேன். ஆனால் என்னுடைய தாயாரின் ஜெபத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தால், என்னுடைய ஜெபத்திற்கு மறுப்பு தெரிவிக்க நேரிடுமே. ஆகவே, கண்ணீரோடு, “தேவனே, உம்முடைய சித்தம் நிறைவேறுக,” என்று என்னை ஒப்புக்கொடுத்தேன்.
இதற்குப் பின்பு, வேதனையற்ற நித்தியத்திற்குள் என் தாயாரை இயேசு சீக்கிரத்தில் அழைத்துக் கொண்டார்.
இயேசு வருமளவும், விழுந்து போன இவ்வுலகில் நாம் பல உபத்திரவங்களை அனுபவிக்க நேரிடும் (ரோ. 8:22-25). நம்முடைய பாவசுபாவம், தெளிவற்ற கண்ணோட்டம், மற்றும் வலி வேதனைகளை குறித்த பயம் ஆகியவை நம்முடைய ஜெபிக்கும் திறனை நிலைகுலையச் செய்திடும். ஆனால், நல்லவேளை, “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 27). வேறோருவருடைய ஜெபத்திற்கு சம்மதம் தெரிவிப்பதால் நமக்கு மனவேதனை அளிக்கக்கூடிய மறுப்பு தெரிவிக்க நேரிடும். ஆயினும் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 28).
தேவனுடைய மகத்தான திட்டத்தில் நம்முடைய சிறிய பங்களிப்பை நாம் அளிக்க சித்தம் கொண்டால், “தேவன் நல்லவர். நான் அறிந்துகொள்ள வேண்டியது இதுவே. அப்படியிருக்க, அவர் என்ன செய்ய சித்தம்கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே,” என்னும் என் தாயாருடைய பொன்மொழியை நாம் எதிரொலிக்கலாம். அவருடைய மகிமைக்கென்று நம்முடைய எல்லா ஜெபங்களையும் தம்முடைய சித்தத்திற்குள்ளாக நமக்கு பதிலளிக்கிறார் என்கிற நிச்சயமுள்ளவர்களாய் தேவ கிருபையின் மேல் விசுவாசம் கொள்வோமாக.