தினமும் யாராவது ஒருவராவது நம்மை ஒரு பொருட்டாக மதிக்காமல் அலட்சியப்படுத்தி நடந்துகொள்ளக்கூடும். சில நேரங்களில் நாமே நம்மை அப்படித் தான் நடத்திக்கொள்வோம். 

தாவீதின் எதிரிகள் அவனை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தனர். வார்த்தைகளால் அவனை அதட்டி, மிரட்டி, அச்சுறுத்தி அவமானப்படுத்தி வந்தனர். அவனுடைய சுயமரியாதையை நிர்மூலமாக்கும் விதத்தில் அவனைத் தாக்கினர், அதனால் அவனது சுயமதிப்பு வீழ்ச்சியடைந்தது (சங். 4:1-2). அதை தாங்கமுடியாமல் “இந்த துயரத்தில் இருந்து என்னை மீட்டருளும்” என்று தேவனிடம் மன்றாடுகிறான். 

“பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்” என்ற வார்த்தையை தாவீது நினைவுகூர்ந்தான். “உண்மையுள்ள ஊழியக்காரன்” என்ற தாவீதின் தைரியமான அறிக்கையை நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் “தெய்வபக்தியுடையவன்” என்று சொல்வதுண்டு. இங்கே இடம்பெற்றுள்ள எபிரேய வார்த்தை ‘ஹெசெத்’ (hesed)  என்பதாகும். அது தேவனுடன் பண்ணப்பட்ட உடன்படிக்கையின் அன்பை குறிக்கின்றது. அப்படியானால், அந்த பதத்தை இவ்வாறு மொழிபெயர்க்கவேண்டும் – “யாரை தேவன் என்றென்றும் சதாகாலங்களிலும் எப்பொழுதும் நேசிக்கின்றாரோ”. 

இதைத்தான் நாமும் நினைவில் கொள்ளவேண்டும்: தேவன் தமது சொந்தகுமாரனை நேசித்தது போல நம்மையும் விசேஷித்த விதத்தில் பிரித்தெடுத்து என்றென்றும் நேசிக்கின்றார். நித்தியத்திற்கும் தமது பிள்ளையாய் ஜீவிக்கும்படி நம்மை பெயர் சொல்லி அழைத்திருக்கின்றார். 

ஆகவே, நம்பிக்கையை இழந்துவிடாமல், தேவன் நம்மீது பொழியும் இலவச அன்பை நினைவுகூர்ந்து மகிழ்ந்திடுவோமாக. நாம் அவரது பிரியமான பிள்ளைகள். ஆகவே நாம் விரக்தி அடைய தேவையில்லை, சமாதானமும் மகிழ்ச்சியும் பாய்ந்தோட, முடிவு சம் பூரணமாய் இருக்கும் (வச-7-8). அவர் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை விட்டுக் கொடுத்துவிட மாட்டார். அவர் நம்மேல் அன்பு செலுத்துவதை நிறுத்துவதேயில்லை.