ஓரு நாள் காலை ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் (Perth) வசித்து வரும் பியோன் முல்ஹோலாந்த் (Fionn Mulholland) என்பவருடைய கார் காணமல் போனது. தடை செய்யப் பட்ட இடத்தில் அவரது காரை நிறுத்தி இருந்தது நினைவுக்கு வந்தவுடன், அவரது காரை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டார். காரை எடுத்து சென்றதற்கான $600 தொகையையும், அபராதத் தொகையையும் எண்ணியவுடன் முல்ஹோலாந்த் விரக்தியடைந்தார். ஆனால் காரை மீட்கும்பொழுது தான் சந்திக்க போகும் நபர் மேல் கோபம் கொள்ளக்கூடாது என்று மனதில் முடிவெடுத்தார். அவரது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், முல்ஹோலாந்த் அந்த சம்பவத்தை பற்றி ஓர் வேடிக்கையான கவிதையை எழுதினார். காரை வைத்திருந்த இடத்தில் வேலை செய்த ஒருவரிடம் அதை வாசித்தும் காண்பித்தார். வேலை பார்த்தவருக்கு அந்த கவிதை பிடித்துப்போனது, அதன் வாயிலாக கசப்பான சம்பவமாக மாறக்கூடிய ஓர் நிகழ்வு தவிர்க்கப்பட்டது.
“வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை” (20:3) என்று நீதிமொழிகள் நமக்கு கற்றுத்தருகின்றது. இரண்டு பேருக்கு நடுவே கருத்து வேறுபாடு இருக்கும்போது, அவர்கள் மத்தியில் வழக்காடுதல் இருந்துகொண்டே இருக்கும். விவாதம் செய்யும்போது கோபம் வெளியரங்கமாய் வெளிப்படாமல் உள்ளுக்குள் கொந்தளித்துக்கொண்டேயிருக்கும். சில நேரங்களில் அது காட்டாற்று வெள்ளம் போல் வெடித்து கிளம்பும்.
நாம் மற்றவரோடு சமாதானத்துடன் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் தேவன் நம்மிடம் கொடுத்துள்ளார். கோபத்தை உணரலாம் ஆனால் அது கடும் சினமாக உருமாறத் தேவையில்லை என்பதை அவரது வார்த்தை நமக்கு உறுதியளிக்கின்றது (எபே. 4:26). நம்மை வருத்தப்படுத்துவோரைக் காணும்போது, கோபத்தில் சீறிப்பாய்ந்து வார்த்தைகளாலோ செயல்களாலோ அவர்களை தாக்குவோம். ஆனால் ஆவியானவர் நம்மோடு இருந்து அப்படிப்பட்ட எண்ணங்கள் நம்மை மேற்கொள்ளாதபடி நமக்கு உதவி செய்வார். எரிச்சலைத் தூண்டும் காரியங்களை நாம் சந்திக்கும்போது தேவன் அவரையே நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக தந்துள்ளார் (1 பேது. 2:23). அவர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையுமுள்ள தேவன் (சங். 86:15).
கோபிப்பதற்கு பொறுமையாயிருக்கடவோம்