தொடர்ச்சியாக மூன்று வருடங்களாய் எனது மகன் ஒரு பியானோ கச்சேரியில் பங்கேற்று வந்தான். கடைசி வருடத்தில் அவன் பங்குபெற்றபோது படிகளில் ஏறி, பியானோவை தனது இசைக்கேற்றவாறு சரிசெய்ததை நான் கவனித்தேன். பின்பு, இரண்டு பாடல்களை அவன் வாசித்துவிட்டு என் பக்கத்தில் வந்து அமர்ந்து, “அம்மா, இந்த வருடம் பியானோ மிகவும் சிறிதாக இருந்தது,” என்று இரகசியமாக்க கூறினான். “அப்படி ஒன்றும் இல்லை, சென்ற வருடம் நீ வாசித்த அதே பியானோதான் அது. இப்போது நீ பெரியவனாகிவிடாய்! நீ வளர்ந்துவிட்டாய்!” என்று அவனது சந்தேகத்தை தீர்த்து வைத்தேன்.
ஆவிக்குரிய வளர்ச்சியும், சரீர வளர்ச்சியைப் போன்றதுதான். மெதுவாகத்தான் மாற்றங்களைக் காணமுடியும். இயேசுவை போல் நாம் மாறிக்கொண்டு வருவது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஓர் செயல்முறையாகும். நமது மனம் புதிதடைவதற்கு ஏற்றவாறு நாமும் மறுரூபமடைந்து வருகிறோம் (ரோ. 12:2).
ஆவியானவர், நமக்குள் வேலை செய்ய ஆரம்பித்தவுடன், நம் வாழ்விலிருக்கும் பாவத்தினை நாம் உணர ஆரம்பிப்போம். தேவனுக்கு மதிப்பளிக்கும் விதத்தில், நாமும் மாறுவதற்கு முயற்சிகளை எடுப்போம். சில நேரங்களில் வெற்றியைச் சுவைப்போம், ஆனால் பல நேரங்களில், நமது முயற்சி தோல்வியை தழுவும். ஒன்றுமே மாறாதபோது, நாம் சோர்வடைந்துவிடுவோம். தோல்வியை கண்டவுடன் எந்த முன்னேற்றமும் அடைய வில்லை என்று தவறாக எண்ணிவிடுவோம். ஆனால், சரியாக இயங்கிக்கொண்டிருக்கும் செயல்முறைக்குள் நாம் இருக்கின்றோம் என்பதைத் தான் அது வெளிபடுத்துகின்றது.
ஆவியானவரின் துணையும், நமது உறுதியான தீர்மானமும், போதுமான நேரமும்தான் நல்ல ஆவிக்குரிய வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரியங்களாகும். நமது வாழ்வின் முக்கியமான சில தருணங்களை நாம் திரும்பிப்பார்க்கும்போது, நாம் எவ்வாறு ஆவிக்குரிய விதத்தில் வளர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று” (பிலி. 1:6) என்பதை நாம் நம்பி ஜீவிக்கும்படியாகவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படியாகவும் தேவன் நமக்கு உதவி செய்வாராக.
ஆவிக்குரிய வளர்ச்சி என்பது செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நடைமுறையாகும்.