நம்முடைய நண்பர் நமது அருகிலிருக்கும் பொழுது வலியைத் தாங்கிக்கொள்வது சுலபமா? வெர்ஜினியா (Virginia) பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இக்கேள்விக்கு விடையறிய ஒரு விசித்திரமான ஆய்வை நடத்தினார்கள். ஒருவர் வேதனை ஏற்படக்கூடிய சூழ் நிலையை எதிர்கொண்டால் அவருடைய மூளை எவ்வாறு செயல்படும் என்பதை அவர்கள் கண்டறிய விரும்பினார்கள். அதுமட்டுமன்றி, அந்நபர் அவ்வேளை தனியாக இருந்தால் அவர் மூளை எவ்வாறு செயல்படும், முன்பின் அறியாத நபரின் கையை பிடித்துக்கொண்டிருக்கும்பொழுது எவ்வாறு செயல்படும் மற்றும் தன் நண்பருடைய கரத்தை பற்றிக் கொண்டிருக்கும்பொழுது எவ்வாறு செயல்படும் என்பதையும் கண்டறிய விரும்பினார்கள்.
ஆராய்ச்சியாளர்கள், பல ஜோடிகளிடம் இந்த சோதனையை மேற்கொண்டபொழுதும், முடிவுகள் ஒரே மாதிரியாகவே இருந்தது. ஒருநபர் தனியாகவோ அல்லது முன்பின் அறியாத நபரின் கரத்தை பிடித்துக்கொண்டு ஓர் அதிர்ச்சியை எதிர்கொள்ளும்பொழுது, அவரது மூளையில் அபாயம் ஏற்படும் சமயத்தில் செயல்படும் பகுதி விழித்துக்கொண்டது. ஆனால் அதே நபர் தன் நண்பரின் கரத்தை பற்றிக்கொண்டிருக்கும் பொழுது, அவருடைய மூளை நிலையானதொரு நிலையில் இருந்தது. தன் நண்பரின் அருகாமை தனக்கு ஆறுதலளித்ததால், அவ்வலி தாங்கிக் கொள்ளக்கூடியதாய் தோன்றியது.
கெத்சமனே தோட்டத்தில் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்த பொழுது, அவருக்கும் ஆறுதல் தேவையாயிருந்தது. ஏனெனில் நம்பிக்கை துரோகம், சிறையிருப்பு மற்றும் மரணத்தை அவர் எதிர்கொள்ளப்போகிறார் என்பதை அவர் முன்னமே அறிந்திருந்தார். ஆகவேதான் தன் நெருங்கிய நண்பர்களைப் பார்த்து “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங் கொண்டிருக்கிறது,” என்று கூறி தன்னோடு கூட வந்து விழித்திருந்து ஜெபிக்குமாறு கேட்டார் (மத். 26:38). ஆனால் பேதுருவும், யாக்கோபும், யோவானும் உறங்கிவிட்டார்கள்.
ஆறுதல்படுத்தக்கூடிய நண்பரின் கரம் ஏதுமின்றி, கெத்சமனே தோட்டத்தின் தாங்கொணாத் துயரத்தை இயேசு தனியாக எதிர்கொண்டார். ஆனால் அவ்வேதனையை அவர் தாங்கிக் கொண்டதினால் தேவன் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதுமில்லை, நம்மை விட்டு விலகுவதுமில்லை என்ற நிச்சயம் நமக்குண்டு (எபி. 13:5). தேவனுடைய அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரித்துவிடக்கூடாது என்பதற்காக நமக்காக இயேசு துன்புற்றார் (ரோ. 8:39). ஆகவே நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் பெலனை அவருடைய அருகாமை நமக்களிக்கிறது.
தேவனுடைய அன்பின் நிமித்தம் நாம் ஒருபோதும் தனிமையாய் இருப்பதில்லை.