இயேசு சிலுவையில் அறையப்படும் சில நாட்களுக்கு முன்பு விலையேறப்பெற்ற நறு மண தைலத்தை மரியாள் எனும் பெயர் கொண்ட ஒரு பெண் இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள். அதனோடுகூட நிற்காமல், அதைக்காட்டிலும் இன்னும் அதிக துணிச்சலான தொரு செயலையும் செய்தாள். அவள் தன் கூந்தலை அவிழ்த்து அதைக்கொண்டு இயேசுவின் பாதத்தை துடைத்தாள் (யோவா. 12:3). அத்தைலம் தன் வாழ்நாள் சேமிப்பாக கூட இருக்கலாம். ஆனால் மரியாள் அதை மாத்திரம் அவருக்கு காணிக்கையாக செலுத்த வில்லை, தன்னுடைய நற்பெயரையும் கூட அதோடு சேர்த்து அவர் பாதத்தில் காணிக்கையாக செலுத்தினாள். ஏனெனில், முதலாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கத்திய கலாச்சாரத்தில், பெண்கள் பொது இடத்தில் தங்கள் கூந்தலை ஒருபோதும் கட்டவிழ்க்க மாட்டார்கள். அதை பண்பற்ற இழிவான செயலாகவே கருதினர். ஆனால் உண்மையான ஆராதனை என்பது மற்றவர்கள் நம்மைக்குறித்து என்ன நினைப்பார்கள் என்று நினையாதிருப்பதே ஆகும் (2 சாமு. 6:21-22). இயேசுவை ஆராதித்து வணங்க, பிறர் தன்னை அடக்கமற்றவள், ஒழுக்கங்கெட்டவள் என்றும்கூட சொன்னால் பரவாயில்லை என்று மரியாள் முடிவு செய்திருந்தாள்.
மற்றவர்கள் நம்மைக்குறித்து நல்லவிதமாக நினைக்க வேண்டும் என்பதற்காக சபைக்கு செல்லும் பொழுது நேர்த்தியாக செல்ல வேண்டும் என்கிற நெருக்கடியை ஏற்படுத்துகிற எண்ணம் நம்மில் அநேகருக்குண்டு. சபைக்குச் செல்லும் பொழுது ஒரு முடி கூட கலைந்து இல்லாதபடி தலையை நன்றாக வாரி, சீவி செல்கிறோம். இதையே உருவகப்படுத்தி கூறுவோமானால், நம்முடைய கூந்தலை அவிழ்த்துவிட்டு, பொய்யான வெளிப்புறத் தோற்றத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் குறைபாடுகளை பயமின்றி வெளிக்காட்ட உதவும் சபையே ஒரு ஆரோக்கியமான சபை. நம்முடைய குற்றங்களை எல்லாம் மறைத்துக் கொண்டு பலசாலிகளாய் காண்பிக்க முற்படுவதைவிட நம்முடைய பெலவீனங்களை கூறி பெலன் பெறக்கூடிய இடமாகவே சபை இருக்க வேண்டும்.
ஆராதனை என்பது எக்குறையும் இல்லாததுபோல நடந்துகொள்ளும் ஒரு ஒழுங்குமுறை அன்று. மாறாக, தேவனோடும் மற்றவர்களோடும் எல்லாவிதத்திலும் உண்மையாக இருப்பதே ஆகும். ஒருவேளை நம்முடைய பெலவீனங்களை வெளிக்காட்டுவதென்பதே நம்முடைய மிகப்பெரிய பயமாயிருந்தால், நாம் செய்யும் மிகப்பெரிய பாவம் அதை மறைப்பதே ஆகும்.
நாம் தேவனிடத்தில் உண்மையாக இருக்கும்பொழுது நம்முடைய ஆராதனை சரியானதாக இருக்கும்.