வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 80வது பிறந்தநாளைக் கொண்டாட, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கிரஹாம் சதர்லேண்ட் (Graham Sutherland) என்ற பிரபலமான ஓவியரை அவரது உருவ படத்தை வரைவதற்கு நியமித்தது. “நீங்கள் எப்படி என்னை வரையப்போகிறீர்கள்? அழகிய தேவதூதன் போலவா அல்லது பயங்கரமான நாய் (Bulldog) போலவா?” என்று சர்ச்சில் அவரிடம் கேட்டதாக கூறப்படுகின்றது. அவரை குறித்த இந்த இரண்டு பிரபலமான கருத்துகளும் அவருக்கு பிடித்திருந்தது. எனினும், சதர்லேண்ட், தான் பார்த்தபடி வரையப்போவதாக கூறினார்.
சர்ச்சிலுக்கு தன் உருவப்படம் திருப்தியளிக்கவில்லை. சதர்லாந்தின் உருவப் படத்தில் நாற்காலியில் சரிந்த நிலையில் அமர்ந்திருந்து, தனக்கே உரித்தான முத்திரை கோபத்துடன் காணப்பட்டார் – அதுதான் நிஜமும்கூட, ஆனால் அது நன்றாயிருக்காதல்லவா? ஆதிகாரப்பூர்வமாக அப்படம் திறக்கப்பட்ட பின்பு, சர்ச்சில், அந்த ஓவியத்தை மறைத்து வைத்தார். பின்னர் அது இரகசியமாக அழிக்கப்பட்டது.
சர்ச்சில் போல், நம்மில் பலர் நமக்குள் நம்மை பற்றிய ஓர் பிம்பத்தை வரைந்துள்ளோம். அதைத்தான் பிறரும் காணவேண்டும் என்றும் விரும்புகிறோம். அது வெற்றி, தெய்வபக்தி, அழகு அல்லது வலிமை போன்ற காரியங்களை குறித்ததாக இருக்கலாம். நாம் நமது ‘அசிங்கமாக’ பக்கங்களை மறைக்க மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை நம்முடைய நிஜமான முகத்தை பிறர் கண்டால் நம்மை நேசிக்காமல் போய் விடுவார் என்ற பயத்தினால்தான் இவ்வாறு செய்கிறோம்.
பாபிலோன் இஸ்ரவேலரை சிறைபிடித்து சென்ற போது, அவர்கள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதை நாம் காண்கிறோம். அவர்களுடைய பாவத்தின் நிமித்தமாகத் தான் தேவன் அவர்களுடைய எதிரிகள் அவர்களை கைப்பற்ற அனுமதித்தார். ஆயினும் அவர்களை பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொருவரின் பெயர்களையுமறிந்த தேவன், அவர்களது அவமானகரமான சோதனைகளிலும் கூடவே இருந்தார் (ஏசா. 43:1-2). அவருடைய கரத்தில் அவர்கள் ‘விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும்’ (வச. 4), பாதுகாக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் (வச. 13). அவர்கள் பாவங்களினால் கறைப்பட்டிருந்தபோதிலும், தேவன் அவர்களை நேசித்தார்.
இந்த உண்மை நமக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டால், பிறர் ஒப்புதலுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் நாம் ஏங்கித் தவிக்க மாட்டோம். நாம் யார் என்கிற உண்மையை தேவன் முற்றிலுமாக அறிந்தபொழுதும், நம்மை அளவற்ற அன்பினால் நேசிக்கிறார் (எபே. 3:18).
தேவனுடைய ஆழமான அன்பு நமக்கு எடுத்துரைப்பது என்னவென்றால் பிறரிடம் நமது நிஜமான சாயலை வெளிப்படுத்த முடியும் என்பதே.