எங்களுடைய மகன் ஆலன் பிறந்த மறுநாள் காலை, எனது கட்டிலோரத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்த மருத்துவர், “ஏதோவொன்று தவறாக உள்ளது” எனக் கூறினார். வெளிப்புறம் பரிபூரணமாக காணப்பட்ட எங்கள் மகனிற்கு பிறப்பிலேயே உயிருக்கு ஆபத்தான ஒரு குறைபாடு இருந்ததால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய 700 மைல்களுக்கு அப்பால் இருந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாயிருந்தது.
உங்கள் குழந்தைக்கு ஏதோ ஒரு குறைபாடு உள்ளது என மருத்துவர் கூறும்பொழுது, உங்கள் வாழ்க்கை மாறிவிடுகிறது. நமக்கு முன் இருக்கிற காரியங்களை குறித்து பயந்து, ஆவியில் நொறுங்குண்டு, நாம் தள்ளாட ஆரம்பிக்கிறோம். அப்பொழுது, கலங்கிப் போயிருக்கும் நாம் நம்முடைய பிள்ளையை போஷிக்க நமக்கு தேவையான பெலத்தை தந்து நம்மை தேற்றி ஆற்றும்படி தேவனையே நோக்கி காத்திருக்கிறோம்.
அன்புள்ள தேவன் இதை அனுமதிப்பாரா? என குழம்புகிறோம். என் குழந்தை மீது அவருக்கு அக்கறை உள்ளதா? அவர் என் குழந்தையோடு இருக்கின்றாரா? என்று அக்காலை வேளையிலே பல எண்ணங்கள் என் விசுவாசத்தை நிலைகுலுங்கச் செய்தது.
பின்பு அங்கு வந்த என்னுடைய கணவர் ஹீராமிடம் மருத்துவர் அச்செய்தியைக் கூறினார். மருத்துவர் சென்ற பிறகு, “ஜோலீன், நாம் ஜெபம் செய்வோம்,” என்று என் கணவர் கூறினார். நான் சரி என்று தலையசைத்தேன். அப்பொழுது அவர் என் கரங்களை பற்றிக்கொண்டு, “பிதாவே நீர் ஆலனை எங்களுக்கு கொடுத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனாலும் அவன் எங்களுடையவனல்ல, உமக்குரியவனே. நாங்கள் அவனை அறியும் முன்னமே நீர் அவனை நேசித்துள்ளீர். ஆகவே அவன் உம்முடையவனே. நாங்கள் அவனோடு இருக்கக்கூடாமற்போயினும் நீர் அவனோடு தயவாய் இருந்தருளும் ஆமென்” என ஜெபித்தார்.
என்னுடைய கணவர் ஹீராம் பொதுவாக அதிகம் பேசமாட்டார். அவருடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ள சிரமப்படுவார். எப்பேற்பட்ட அமைதலான தருணங்களையும் போதுமான வார்த்தைகளைக் கொண்டு என்னால் நிரப்ப முடியும் என்பதை அவர் அறிந்திருந்ததால், அநேகந்தரம் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளக் கூட முயற்சிக்க மாட்டார்.
ஆனால் அன்றைய தினம் விசுவாசமின்றி உடைந்து போன இருதயத்தோடு, ஆவியிலே நொறுங்குண்டு இருந்த பொழுது, என்னால் கூற முடியாத வார்த்தைகளை என் கணவர் கூறி ஜெபிக்கும்படி தேவன் அவரை பெலப்படுத்தினார். இன்னும் என் கணவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டிருந்த நான், ஆழ்ந்த அமைதியின் மத்தியில், பல கண்ணீர் துளிகளின் ஊடாய் தேவன் எனக்கு மிக அருகில் உள்ளார் என்பதை உணர்ந்தேன்.
ஜெபிக்கிற நண்பனே சிறந்த வகையிலான நண்பன்.