உணவக பணம் செலுத்துமிடத்தில் அஜாக்கிரதையாக என் கையிலிருந்த குவளையை தவறவிட்ட பொழுது, அதில் இருந்த பானம் மேஜையில் சிந்தி, வழிந்தோடி கீழே கொட்ட ஆரம்பித்தது. தர்மசங்கடத்துடன் என்ன செய்வது என்று புரியாமல் என் இரண்டு கைகளையும் கூப்பி, அந்நீர்வீழ்ச்சியை பிடிக்க முயன்றேன். ஆனால் என் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏனென்றால் என் கரங்களில் ஒரு தேக்கரண்டி அளவு பானத்தைத் தவிர மற்றவை என் கால்களைச் சுற்றி சிறுசிறு குட்டைகளாக கொட்டிக்கிடந்தன.
என் வாழ்க்கையும் கூட சில நாட்கள் இப்படித்தான் இருக்கும். பிரச்சனைகளைத் தீர்க்க திணறிக் கொண்டிருப்பேன், அனைத்தையும் மேற்பார்வை செய்யவும் சூழ்நிலைகளை என் கட்டுப்பாட்டில் வைக்கவும் தடுமாறிக் கொண்டிருப்பேன். நான் எவ்வளவு தான் முயன்றாலும் எல்லாவற்றையும் நேர்த்தியாக நிர்வகிக்க இயலாமல் என் கரங்கள் தளர்ந்து போகும். எப்படியோ ஏதாவதொன்று என் விரல்களின் ஊடாய் நழுவி தரையிலே என் காலருகே கொட்டி, என்னை திணறச் செய்துவிடும். என் கைகளை வளைத்து, என் விரல்களை நெருக்கமாக்கினாலும் என்னால் சமாளிக்க முடிவதில்லை.
ஆனாலும் இவை தேவனால் கூடும். அவர் இப்பூமியின் தண்ணீர்களை, அதாவது சமுத்திரங்கள், ஆறுகள் மற்றும் மழையையும் தன்னுடைய கைப்பிடியினால் அளக்கிறார் என்று ஏசாயா கூறுகிறார் (40:12). அது எப்படி சாத்தியம் என்றால், அவருடைய கரங்கள் அவ்வளவு பெரிதாக உள்ளது. அப்படியென்றால், ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீருக்கு மேலாக நம்முடைய கரங்களில் நாம் ஏந்தும்படி தேவன் நம்மை சிருஷ்டிக்காததால், அதற்கும் மேலாக எதையும் முயற்சிக்கத் தேவையில்லை. சமாளிக்க முடியாமல் திணற நேரிட்டால், நாம் நம்முடைய கவலைகளையெல்லாம் அவருடைய வல்லமையான கரங்களில் ஒப்படைத்து விடுவோமாக.
நம்மால் சமாளிக்க முடியாத காரியங்களை தேவன் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசிப் போமாக.