அரசனாகிய கன்யூட் (Canute) 11ஆம் நூற்றாண்டில் பூமியில் வாழ்ந்த மிக சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர். அவரைப்பற்றி புகழ்பெற்ற ஒரு கதை உண்டு. அதாவது, அவர் தன்னுடைய நாற்காலியை கடற்கரையோரமாக போடக் கட்டளையிட்டு, பின்பு சீறும் கடலைப் பார்த்து, “நீ என் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறாய். ஆகவே என்னுடைய தேசத்திலே நீ எழும்பவும் கூடாது என்னுடைய ஆடைகளையோ, கை, கால்களையோ நனைக்கவும் கூடாது என உனக்கு நான் ஆணையிடுகிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் அலை எழும்பி ராஜாவின் கால்களை நனைத்தது.
கன்யூட்டின் பெருமையை குறித்து உரைக்கவே இக்கதை அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது தாழ்மையை குறித்ததான கதை. ஏனென்றால், “அவரையன்றி வானமும், பூமியும், கடலும் கீழ்ப்படியாது, ராஜாக்களின் வல்லமை வெறுமையானது என்று உலகமனைத்தும் அறிந்து கொள்ளட்டும்,” என அச்சம்பவத்திற்கு பின்பு கன்யூட் கூறினார். தேவன் ஒருவரே ஒப்பற்ற வல்லமை பொருந்தியவர் என்பதை கன்யூட்டின் கதை குறிப்பிடுகிறது.
இதைத்தான் யோபுவும் கண்டறிந்தான். பூமியின் அஸ்திபாரங்களை போட்டவரோடு (யோபு 38:4-7), காலைப்பொழுது தோன்றவும், இரவு நேரம் முடியவும் கட்டளையிட்டவரோடு (வச. 12-13), பனியை பண்டசாலையில் சேர்த்து வைப்பவரோடு (வச. 22), நட்சத்திரங்களை வழிநடத்துபவரோடு (வச. 31-33) நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் மிகவும் அற்பமானவர்களே. அலைகளை அரசாளுபவர் ஒருவரே. கண்டிப்பாக அது நாமல்ல (வச. 11; மத். 8:23-27).
ஒருவேளை நம்மை நாமே மிஞ்சின அறிவாளியாகவோ, பெருமையாகவோ எண்ணத் தொடங்கினால், கன்யூட்டின் கதையை நமக்கு நாமே நடித்துக் காட்டிக்கொண்டால் நலமாயிருக்கும். கடலோரம் சென்று அலைகளை நிற்கச் சொல்லுங்கள் அல்லது சூரியனை சற்று நகரச்சொல்லுங்கள். அப்பொழுது எல்லோரிலும் மேன்மையானவரை நினைவுகூர்ந்து, நம்முடைய வாழ்வை அவர் அரசாளுவதற்காக நன்றி கூறுவோம்.
தேவன் பெரியவர், நாம் சிறியவர், அது நல்லது.