சில சமயங்களில் நானும், என்னுடைய மனைவியும் ஒருவர் மற்றொருவருடைய வாக்கியங்களை நிறைவு செய்வோம். எங்களுடைய 30 வருட திருமண வாழ்வில் ஒருவர் மற்றவர் எண்ணுவதையும், பேச நினைப்பதையும் அதிகதிகமாய் அறிந்து வைத்துள்ளோம். சொல்லப் போனால் சில சமயங்களில் ஒரு வாக்கியத்தை முடிக்கக்கூட தேவையில்லை; ஒரே வார்த்தை அல்லது சிறு பார்வை கூட போதும், எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த.
நமக்கு மிகவும் சவுகரியமாக இருப்பதினால் நம்முடைய பழைய காலணிகளை தொடர்ந்து உபயோகிப்பது போல, இதிலும் ஒரு சவுகரியம் உண்டு. சில சமயங்களில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “என் பழைய செருப்பே” என ஆசையாய்க் கூறிக்கொள்வோம். ஆனால் எங்களை நன்கு அறியாதவர்கள் இதைக்கேட்டால் ஒன்றும் புரியாமல் திகைப்பார்கள்! அநேக ஆண்டுகளைக் கடந்து வந்த எங்களுடைய உறவு அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகளைக் கொண்ட ஒரு மொழியை தனக்கென உருவாக்கிக்கொண்டுள்ளது.
நம்மை ஆழ்ந்து அறிந்தவராய் தேவன் நம்மை நேசிக்கிறார் என்னும் வெளிப்பாடு நமக்கு ஆறுதல் அளிக்கிறது. “என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்,” என தாவீது எழுதியுள்ளான் (சங். 139:4). இயேசுவோடு கூட அமர்ந்து உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலுள்ள காரியங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்த நீங்கள் திணறும் பொழுது, அதை அறிந்தவராய் புன்னகை புரிந்து நீங்கள் கூற நினைத்ததை அப்படியே அவர் வெளிப்படுத்துவார். தேவனோடு உரையாட நாம் ஏற்ற வார்த்தைகளை கூற வேண்டிய அவசியமில்லை என்பது நமக்கு எவ்வளவு நிம்மதியளிக்கக்கூடிய விஷயம்! அவர் நம்மை நேசிப்பதுமட்டுமின்றி நம்மை முழுவதுமாக அறிந்தும் வைத்திருக்கிறார்.
நம்முடைய வார்த்தைகளைத் தாண்டி தேவன் நம்முடைய இருதயங்களைக் காண்கிறார்.